மக்களுக்கு தரமான ரேஷன் அரிசி வழங்குவதே இலக்கு.. இதில் CM விஜய் உறுதி - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!!
நம் சட்டமன்றத்தில் இருக்கும் பெரும்பான்மையானோர் ரேஷன் அரிசியை சமைத்து உண்கிறோமா? மனசாட்சிப்படி பேச வேண்டும்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அமைச்சர்கள் வெங்கடரமணன், காந்திராஜ் உள்ளிட்டோர் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு விரிவாகப் பதிலளித்தனர். விவாதத்தின் மையமாக அமைந்தது ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியின் தரமும் விநியோகமும் தொடர்பான விவகாரம்.
ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே காரசாரமான பரிமாற்றங்கள் நடைபெற்றன.இந்த விவாதத்தில் பங்கேற்ற அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, முதலமைச்சர் விஜய்யின் உறுதியான நிலைப்பாட்டை எடுத்துரைத்தார். பொதுமக்கள் அனைவருக்கும் உயர்தர அரிசியே கிடைக்க வேண்டும் என்பதே அரசின் இலக்கு என அவர் தெரிவித்தார்.
தற்போது ரேஷன் அரிசியின் பெரும்பகுதி இட்லி மாவு தயாரிப்பிற்கே பயன்படுத்தப்படுவதாக சுட்டிக்காட்டிய அவர், மக்கள் நேரடியாகச் சமைத்து உண்ணக்கூடிய சன்ன ரக அரிசியை வழங்கும் நோக்கில் சன்ன ரக நெல் கொள்முதலுக்கான ஊக்கத்தொகை உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். தனது சிறுவயது அனுபவங்களை நினைவுகூர்ந்த அமைச்சர், அப்போது ரேஷன் கடைகளில் நிறம் மாறிய அரிசியே கிடைத்ததாகக் கூறினார்.
இதையும் படிங்க: விஜய் வசதிக்காக அலுவலகம் மாற்றமா? அமைச்சர் ஆதவ் சொன்ன முக்கிய காரணம்..!!
“சட்டமன்றத்தில் உள்ள பெரும்பாலானோர் ரேஷன் அரிசியைச் சமைத்து உண்கிறோமா? மனசாட்சிப்படி பேச வேண்டும். 90 சதவீத மக்கள் அதை நேரடியாகச் சமைப்பதில்லை,” என அவர் வலியுறுத்தினார். இந்த நிலையை மாற்றவே விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஊக்கத்தொகை அதிகரிக்கப்பட்டது என விளக்கினார். நெல் விவசாயிகளான சில உறுப்பினர்கள் ரேஷன் அரிசி சாப்பிடுவதாகப் பேசுவதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், முதலமைச்சர் விஜய் தனது அம்மா மற்றும் அக்கா ரேஷன் கடையில் வாங்கும் அரிசி தரமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த முடிவை எடுத்ததாகக் குறிப்பிட்டார்.
தரமான சன்னரக அரிசி உற்பத்தியை அதிகரிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இலவச மருத்துவமனை மற்றும் இலவச கல்வி முறைகளை எந்த அமைச்சரும் அல்லது எம்.எல்.ஏ.வும் பயன்படுத்துவதில்லை எனச் சுட்டிக்காட்டிய அவர், “இலவசம் என்ற வார்த்தையே தவறு. மக்கள் வரிப்பணத்தில் நடத்தும் அரசு நிலையங்களை அனைவரும் பயன்படுத்தும் நிலை வர வேண்டும்,” எனக் கூறினார். இவ்வாறு ரேஷன் அரிசி தர மேம்பாடு குறித்த விவாதம் சட்டப்பேரவையில் முக்கியத்துவம் பெற்றது.
இதையும் படிங்க: ஊழல் இல்லா தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வாரீர்! CII மாநாட்டில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அழைப்பு!