அதிமுக தலைமையிலான கூட்டணியில் தவெக? - மாவட்ட செயலாளர்களுடன் என்.ஆனந்த் ரகசிய ஆலோசனை!
தவெகவில் கட்சி ரீதியாக உள்ள 128 மாவட்ட செயலாளர்களிடம் சென்னையில் இருந்தபடி பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கருத்து கேட்பு.
தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது அரசியல் நிலைப்பாட்டில் அதிரடி மாற்றங்களைச் செய்யத் தொடங்கியுள்ளது. தனித்துப் போட்டி என்று இதுவரை கூறி வந்த அக்கட்சியின் தலைமை, தற்போது கூட்டணி குறித்து மாவட்ட செயலாளர்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தவெக தலைவர் விஜய் அவர்கள் சிபிஐ சம்மன் விவகாரம் தொடர்பாக டெல்லி செல்லத் தயாராகி வரும் சூழலில், பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் காணொளி வாயிலாக பங்கேற்ற 120 மாவட்ட செயலாளர்களில், சுமார் 98 பேர் தனித்துப் போட்டியிடுவதை விடப் பலமான ஒரு கூட்டணியில் இணைவதே கட்சியின் எதிர்காலத்திற்கு நல்லது எனத் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர். குறிப்பாக, திமுக-வை வீழ்த்த வாக்குகள் சிதறாமல் இருப்பதே முக்கியம் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: ரஜினியை மிரட்ட யாராலும் முடியாது ஆதவ் அர்ஜுனாவிற்கு திருமாவளவன் பதிலடி!
ஒருபுறம் பாஜக-வும் தவெக-வை தங்கள் கூட்டணிக்குள் கொண்டுவரத் தீவிரமாக முயன்று வரும் நிலையில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைவதே சரியாக இருக்கும் எனப் பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்துத் தலைவர் விஜய்யிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது. டெல்லி பயணத்திற்குப் பிறகு, விஜய் தனது இறுதிக்கட்ட முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களுடன் மட்டுமே கூட்டணி என மேடைகளில் முழங்கிய தவெக, தற்போது தேர்தல் கள யதார்த்தத்தைக் கருத்தில் கொண்டு கூட்டணிப் பாதையைத் தேர்ந்தெடுக்கத் தயாராகி வருவது, தமிழகத்தின் மும்முனைப் போட்டியை இருமுனைப் போட்டியாக மாற்றும் சூழலை உருவாக்கியுள்ளது.
இதையும் படிங்க: விஜய் போல அற்ப அரசியல் செய்யவில்லை! ஆதவ் அர்ஜுனாவிற்கு ரஜினி ரசிகர் மன்றம் பதிலடி!