த.வெ.க விருப்ப மனு தாக்கல் இன்றுடன் நிறைவு... N. ஆனந்த் முன்னிலையில் குவிந்த நிர்வாகிகள்!
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது முதல் தேர்தல் களத்தை சந்திக்க தயாராகி வரும் நிலையில், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனுத் தாக்கல் இன்றுடன் (பிப்ரவரி 20, 2026) நிறைவடைகிறது.
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய சக்தியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) சார்பில், 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்ப மனுத் தாக்கல் இன்றுடன் (பிப்ரவரி 20) நிறைவடைகிறது. சென்னை பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில், தமிழகத்தின் பல்வேறு மூலைகளிலிருந்தும் வந்த ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கக் திரண்டுள்ளதால் அந்தப் பகுதியே திருவிழாக் கோலம் பூண்டுள்ளது.
முதலில் பிப்ரவரி 14-ஆம் தேதி வரை மட்டுமே விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் பெரும் கோரிக்கையை ஏற்று, தலைவர் விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படி பிப்ரவரி 20-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டது. இன்று கடைசி நாள் என்பதால், காலை முதலே பனையூர் அலுவலகத்தில் நீண்ட வரிசையில் நின்று நிர்வாகிகள் விண்ணப்பங்களை ஒப்படைத்து வருகின்றனர்.
த.வெ.க பொதுச் செயலாளர் N.ஆனந்த் முன்னிலையில் இந்த மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்த நிர்வாகிகள், தங்களது அரசியல் அனுபவம் மற்றும் தொகுதிப் பணிகள் குறித்த விவரங்களுடன் உற்சாகத்துடன் சமர்ப்பித்து வருகின்றனர். தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் சேர்த்து, இன்று மாலைக்குள் பல ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பெண்கள் அதிக அளவில் ஆர்வத்துடன் விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தென்னாட்டின் ஜான்சி ராணி அஞ்சலை அம்மாளுக்கு தவெக தலைவர் விஜய் மலரஞ்சலி!
இன்று மாலை 6 மணியுடன் மனுத் தாக்கல் நிறைவு பெறுகிறது. இதனைத் தொடர்ந்து, பெறப்பட்ட விண்ணப்பங்களை தலைவர் விஜய் அவர்கள் தலைமையிலான 10 பேர் கொண்ட உயர்மட்டக் குழு தீவிரமாக ஆய்வு செய்யும். அதன் பின்னர், தகுதியான நபர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டு வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்படும்.
தமிழக வெற்றிக் கழகம் சந்திக்கவிருக்கும் முதல் சட்டமன்றத் தேர்தல் என்பதால், வேட்பாளர் தேர்வில் எவ்வித சமரசமும் இன்றித் தூய்மையான மற்றும் மக்கள் செல்வாக்கு மிக்கவர்களைத் தேர்வு செய்யக் கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, விருகம்பாக்கம் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் தலைவர் விஜய் போட்டியிடக் கூடும் எனத் தகவல்கள் கசிந்துள்ள நிலையில், த.வெ.க-வின் இந்தத் தேர்தல் முன்னேற்பாடுகள் மற்ற அரசியல் கட்சிகளிடையே பெரும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: விஜய் ஓட்டு வாங்குவார், ஆனா ஜெயிக்க முடியுமா? கார்த்திக் சிதம்பரம் எழுப்பும் அரசியல் கேள்வி!