×
 

புழல் ஏரியில் கழிவுநீரா.? குடிநீருக்கு பேராபத்து..! வேல்முருகன் எச்சரிக்கை..!

குழல் ஏரியில் கழிவு நீரை கலந்ததாக கூறப்படும் சம்பவத்தை சுட்டிக்காட்டி வேல்முருகன் பல்வேறு கேள்விகளை முன் வைத்தார்.

சென்னை மக்களின் குடிநீருக்கு ஆபத்தா என்றும் புழல் ஏரியில் கழிவுநீரா என்றும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பினார்.  சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமான புழல் ஏரி இன்று நேற்றல்ல.பல ஆண்டுகளாகவே மாசுபாட்டின் ஆபத்தைச் சுமந்து கொண்டிருக்கிறது. அதிகாரிகளின் ஆய்வுகள், நீதிமன்ற நடவடிக்கைகள், சுற்றுச்சூழல் எச்சரிக்கைகள் என அனைத்தும் இருந்தும், அதன் அடிப்படைப் பிரச்சினைக்கு இன்னும் நிரந்தரத் தீர்வு காணப்படவில்லை என்பது வேதனைக்குரியது என்றார்.

2017-ஆம் ஆண்டிலேயே புழல் ஏரியில் மருத்துவக் கழிவுகள் மற்றும் பிற கழிவுகள் கொட்டப்படுவதாக வெளியான செய்தியைத் தொடர்ந்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கை எடுத்தது. விசாரணையில் ஏரியில் குப்பைகள் கொட்டப்பட்டிருந்தது பதிவானதுடன், ஒரு நிறுவனத்துக்கு ரூ.17.71 இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுச்சூழல் இழப்பீடும் விதிக்கப்பட்டது என்பதை குறிப்பிட்டுள்ளார்.

தற்போது, மலக்கழிவால் மாசுபட்ட நீர் மூலம் வயிற்றுப்போக்கு, காலரா, சீதபேதி, வயிற்றுக் குடல் தொற்றுகள், டைபாய்டு, கல்லீரல் அழற்சி ‘ஏ’ உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. குறிப்பாக குழந்தைகள் கடுமையான வயிற்றுப்போக்கால் நீரிழப்பு உள்ளிட்ட ஆபத்துகளுக்கு உள்ளாகக்கூடும் என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: முதல்வருக்கு நன்றி… சாலைக்கு விஜய் பெயர்..! ஏகனாபுரம் கிராமசபையில் நடந்தது என்ன..?

இன்று ஏரியில் கண்டறியப்பட்ட மாசுபாடு, நாளை மக்களின் உடல்நலப் பேராபத்தாக மாறிவிடக் கூடாது என்றும் கூறினார். ஏரி நீர் சுத்திகரிக்கப்பட்ட பிறகே குடிநீராக வழங்கப்படுகிறது என்பதால், தற்போதே சென்னை மக்களின் குடிநீரில் நோய் பரவுகிறது என்று கூறவில்லை. ஆனால், குடிநீரின் மூல ஆதாரத்திலேயே மலக்கழிவு மாசுபாடு தொடர்ந்து கண்டறியப்படுவது மிகத் தீவிரமான எச்சரிக்கை என தெரிவித்துள்ளார்.

எனவே புழல் ஏரிக்குள் கழிவுநீர் செல்லும் ஒவ்வொரு வழித்தடத்தையும் உடனடியாகக் கண்டறிந்து நிரந்தரமாகத் தடுக்க வேண்டும் என்றும் பாதாளச் சாக்கடை வசதி இல்லாத அனைத்து குடியிருப்புகளுக்கும் உடனடியாக இணைப்பு வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளதுடன், புழல் ஏரியின் நீரைத் தொடர்ந்து அறிவியல் முறையில் பரிசோதித்து, அதன் முழுமையான முடிவுகளை மக்களுக்கு வெளிப்படையாக வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினார். 

இதையும் படிங்க: விஜயை சீண்டிய நயினார்..! அம்மா விவகாரத்தில் அமைச்சர் அருண் ராஜ் கொடுத்த பதிலடி!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share