தேனியில் நாதக - தவெக இடையே கடும் மோதல்! தவெக நிர்வாகிகள் மீது 5 பிரிவுகளில் வழக்கு.. மா.செ. தலைமறைவு!
தேனியில் நாதக பொதுக்கூட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்திய விவகாரத்தில் தவெக மாவட்ட செயலாளர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவாகியுள்ள நிலையில், லெப்ட் பாண்டி தலைமறைவு என்று தகவல் வெளியாகியுள்ளது.
தேனியில் நாம் தமிழர் கட்சி (NTK) மற்றும் தமிழக வெற்றிக் கழகம் (TVK) தொண்டர்களிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாகத் தவெக நிர்வாகிகள் 3 பேரைப் போலீசார் கைது செய்துள்ள நிலையில், முக்கிய நிர்வாகிகள் இருவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
தேனி பங்களாமேடு பகுதியில் நேற்று (பிப்ரவரி 8) இரவு நாம் தமிழர் கட்சி சார்பில் "நாமே மாற்று!" என்ற தலைப்பில் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் சிறப்புரையாற்றினார். துரைமுருகன் மேடையில் பேசிக் கொண்டிருந்தபோது, அவ்வழியே இருசக்கர வாகனங்களில் சென்ற தவெக-வினர் “தளபதி விஜய் வாழ்க” என முழக்கமிட்டவாறுச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நாதக தொண்டர்களுக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கார் முற்றுகையும் தாக்குதலும்: கூட்டம் முடிந்து துரைமுருகன் சென்ற பிறகு, 5 கார்களில் வந்தத் தவெக நிர்வாகிகளை நாதக-வினர் வழிமறித்துச் சிறை பிடித்தனர். அப்போது இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், தவெக நிர்வாகி ஒருவரின் கார் கண்ணாடி அடித்து நொறுக்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்திய தேனி போலீசார், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையும் படிங்க: "முடிவை நாளை சொல்கிறேன்!" - தேனியில் இருந்து புறப்பட்ட ஓபிஎஸ்-இன் சஸ்பென்ஸ் பதில்..!!
தவெக தேனி தெற்கு மாவட்டப் பொருளாளர் கௌதம், நிர்வாகிகள் தன்வந்த் மற்றும் வசந்த் ஆகிய 3 பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள தவெக தேனி தெற்கு மாவட்டச் செயலாளர் லெப்ட் பாண்டி மற்றும் சின்னமனூர் நகரச் செயலாளர் சலாம் ஆகியோரை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் சீமான் மற்றும் சாட்டை துரைமுருகனுக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாக லெப்ட் பாண்டி மீது வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மோதல் சம்பவத்தால் தேனி மாவட்டத்தில் பதற்றமானச் சூழல் நிலவுவதால் கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: நாதக வேட்பாளர் அறிவிப்பு..!! வில்லிவாக்கம் தொகுதியின் வேட்பாளர் இவர் தானாம்..!!