டாஸ்மாக் நிறுவனத்திற்கு மதுபானங்களை வழங்கும் சப்ளையர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் மீது கூடுதல் வரி மற்றும் கட்டணங்களை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தில், பாட்டிலுக்கு ₹10 திருப்பித் தரப்படும் வைப்பு தொகை (refundable deposit) நடைமுறையில் இருந்தது. இதை சில டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்கும்போது கூடுதலாக வசூலிப்பதாக வாடிக்கையாளர்கள் கூறினர். பாட்டிலைத் திரும்பக் கொடுத்தால் அந்த ₹10 திருப்பித் தரப்பட வேண்டும்.
இந்த நடைமுறையில்தான் முக்கியமான சர்ச்சையாக உருவானது. “MRP-க்கு மேல் ₹10 வாங்குவது சட்டவிரோதமான கூடுதல் வசூலா? அல்லது காலி பாட்டில் திரும்பப் பெறுவதற்கான refundable deposit-ஆ?” என்ற குழப்பம் ஏற்பட்டது.
இதையும் படிங்க: இனிமே NO TENSION..! டாஸ்மாக்கில் புதிய கொள்முதல் நடைமுறை... இன்று முதல் அமல்..!!
அரசு தரப்பில், இந்த ₹10 தனியாக வசூலிக்கப்படுவதால் கண்காணிப்பதில் சிக்கல் ஏற்படுவதாகவும், இனி அந்த தொகையை MRP-க்குள் ஒருங்கிணைப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது ஒரு மதுபான பாட்டிலுக்கு அதிகபட்சமாக 20 ரூபாய் வரையும், ஒரு பெட்டிக்கு 90 ரூபாய் வரையும் கூடுதல் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு 1,000 கோடி ரூபாய் வரை கூடுதல் வருமானம் ஈட்டுவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு மதிப்பு கூட்டப்பட்ட வரி திருத்தச் சட்டம் 2026-ன் கீழ், சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலவரி விதிப்பது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழக அரசு, மதுபான விற்பனையை ஒழுங்குபடுத்தவும், காலி மதுபான பாட்டில்களை அகற்றுதல் மற்றும் மறுசுழற்சி செய்வதில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை சரிசெய்யவும், மதுவிலக்கு மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகள், மதுவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்டவற்றுக்காக சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலவரி என்ற புதிய வரியை கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு மதுபானங்களை வழங்கும் சப்ளையர்கள் மற்றும் மதுபான உற்பத்தியாளர்கள் மீது இந்த வரி விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இதனால் மதுபானங்களின் விலையில் எந்தவிதமான உயர்வும் இருக்காது என அமைச்சர் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: டாஸ்மாக் ஊழியர்களுக்கு யூனிஃபார்ம்! நவம்பர் 15 முதல் டிரஸ் கோடு கட்டாயம்! அரசு போட்ட கெடுபிடி!