சென்னை: சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ‘ஜெம்’ வீரமணி மீது தொடர்ந்து புகார்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், 16 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகார் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘ஜெம்’ வீரமணி மீது சிறுமிகளுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அவை தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், சென்னை சேர்ந்த பெண் ஒருவர் அளித்துள்ள புதிய புகார் போலீஸ் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
அந்தப் புகாரில், தங்களது குடும்பத்தின் ஏழ்மை நிலையை பயன்படுத்தி, தனது 16 வயது மகளின் கல்விக்கு வீரமணி உதவி செய்ததாக அந்தப் பெண் தெரிவித்துள்ளார். பின்னர் தனது மகளுடன் நெருக்கமாக பழகிய வீரமணி, அவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாகவும், இதனால் மனமுடைந்த தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: வழக்கை முடிக்க முயன்றது ஏன்? ஜெம் வீரமணி விவகாரத்தில் போலீசார் மீது விசாரணை!

மேலும், மகளின் மரணம் தொடர்பாக அப்போதே சென்னை ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், அந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் புகாரில் கூறப்பட்டுள்ளது.
வீரமணியின் பண பலம் மற்றும் செல்வாக்கு காரணமாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என சந்தேகம் தெரிவித்துள்ள அந்தப் பெண், பின்னர் காவல் நிலையத்தில் விசாரித்தபோது, ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்ற காலகட்டத்தில் தனது புகார் மனு காணாமல் போய்விட்டதாக தெரிவிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது வீரமணி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தனது மகளின் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், அதற்கு காரணமானதாக குற்றம்சாட்டப்படும் வீரமணி மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரில் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் மேற்கொள்ளும் விசாரணை மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் விசாரணையின் மூலம் உறுதி செய்யப்பட வேண்டியவை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஜெம் வீரமணி பாலியல் வழக்கு! எங்களையும் சீரழிச்சிட்டாரு! SIT முன் மேலும் 3 சிறுமிகள் கண்ணீர்!