ஜெயங்கொண்டம் அருகே கோட்டியால் அரசு டாஸ்மாக் கடையை மூடக்கோரி நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு டாஸ்மாக் கடை முன்பு போராட்டம் நடத்த முற்பட்டபோது போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது காத்திருந்த போலீசாரையும் ஏமாற்றி குறுக்கு வழியாக டாஸ்மாக் கடைக்கு சென்று பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கோட்டியால் கடைவீதியில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த நிலையில் பிரச்சனைக்குரிய இந்த டாஸ்மாக் கடையை மூடக்கோரி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோட்டியால் பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 90 நாட்களில் டாஸ்மாக் கடை மூடப்படும் என அதிகாரிகள் எழுத்து மூலம் பொதுமக்களுக்கு உறுதிமொழி அளித்தனர்.
அதன்படி அதிகாரிகள் அளித்த உறுதிமொழியின் கெடு நேற்றுடன் முடிந்த நிலையில் கோட்டியால் கிராமத்தில் உள்ள பிரச்சனைக்குரிய டாஸ்மாக் கடை தொடர்ந்து செயல்பட்டு வந்ததாக தெரிகிறது.
இதையும் படிங்க: டாஸ்மாக் கடை முன்பு திடீர் தகராறு! 2 பேருக்கு அரிவாள் வெட்டு; 7 பேர் கைது! தலைமறைவானவரை தேடும் போலீஸ்!
இதில் அதிருப்தியடைந்த கோட்டியால், இருகையூர், நடுவலூர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் திரண்டு கோட்டியால் அரசு டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி இன்று போராட்டம் நடத்த முடிவு செய்து நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் வந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பொதுமக்கள் டாஸ்மாக் கடைக்கு செல்லாதபடி ஆங்காங்கே இரும்பு தடுப்புகள் அமைத்து முன்னெச்சரிக்கையாக நின்று கொண்டிருந்தனர்.
இதனிடையே திரண்டு வந்த பொதுமக்கள் டாஸ்மாக் கடை அருகே சென்றபோது, அங்கிருந்த போலீசார் பொதுமக்களை தடுத்து நிறுத்தி அமைதி பேச்சு வார்த்தைக்கு வரும்படி கேட்டுக் கொண்டனர். ஆனால் பொதுமக்கள் போலீசார் பேச்சை எதுவும் கேட்க முன்வராமல் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என்று உறுதியாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த பொதுமக்கள் திட்டமிட்டபடி போராட்டத்தை நடத்திய தீர வேண்டும் என எண்ணிய கிராம மக்கள் அங்கு நாலாப்புரமும் நின்றிருந்த போலீசாரையும் ஏமாற்றி, குறுக்கு வழியாக சென்று திட்டமிட்டபடி டாஸ்மாக் கடை முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
தற்போது அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் நிலையில், அங்கிருந்த பொதுமக்கள் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என்றும் டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடினால்தான் கலைந்து செல்வோம் என்று தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 717 டாஸ்மாக் கடைகள் மூடியும் குறையாத மது விற்பனை! தமிழகத்தில் தினமும் 1 கோடி மது பாட்டில்கள் சேல்ஸ்?