திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரத்தில், சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களுக்கு போதிய தண்ணீர் கிடைக்காததை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முத்துப்பேட்டை வழியாக செல்லும் கோரையாற்றில் சம்பா சாகுபடிக்கு தேவையான அளவு தண்ணீர் வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் கோரையாறு மூலம் பாசனம் பெறும் உதயமார்த்தாண்டபுரம், கீழக்காடு, செருப்பனையூர், நாச்சிகுளம், பின்னத்தூர், தெற்கு பள்ளியமேடு, வடக்கு பள்ளியமேடு, தில்லைவிளாகம், இடும்பாவனம் உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சுமார் 5 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் தண்ணீரின்றி கருகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து விரக்தியடைந்த 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்க மாவட்ட தலைவர் முருகையன் தலைமையில் உதயமார்த்தாண்டபுரம் கடைத்தெருவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையும் படிங்க: அம்போன்னு நிற்கும் 5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள்... விஜய் ஆட்சியில் வீதிக்கு வந்த விவசாயிகள்... ஆவேச முடிவு...!
ஆனால், வயல்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என அதிகாரிகள் உறுதியான உத்தரவாதம் அளித்தால் மட்டுமே சாலை மறியலை கைவிடுவோம் என விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர். அப்போது நிகழ்விடத்திற்கு வந்த அதிகாரிகளுக்கும் விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது
தண்ணீர் திறப்பதாக உறுதி அளித்தால் மட்டுமே சாலை மறியல் போராட்டத்தை கைவிடுவோம் என தற்போது சாலை மறியல் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
சாலை மறியல் காரணமாக திருத்துறைப்பூண்டி- பட்டுக்கோட்டை இடையே சுமார் இரண்டு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
இதையும் படிங்க: “விசில் போடு...” - சி.எம். விஜய் கவனத்தை ஈர்க்க விவசாயிகள் நூதன போராட்டம்... 4வது நாளாக அதிரடி...!