மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா ஆகியோர் பெற்றிருக்கும் மகத்தான வெற்றி, இக்கூட்டணிக்கும் கூட்டணி அரசு என்ற தவெக தலைவர் விஜய்யின் நிலைப்பாட்டிற்கும் மக்கள் வழங்கிய முழு அங்கீகாரம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகி தவெக வேட்பாளர்கள் இருவரும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, விசிக தலைவர் தொல். திருமாவளவன் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.
அதில், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட தவெக வேட்பாளர்கள் மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா ஆகிய இருவரும் வெற்றி பெற்றிருப்பது இக்கூட்டணிக்கு மக்கள் அளித்த பெரும் அங்கீகாரமாகும்.
இதையும் படிங்க: சம வேலைக்கு சம ஊதியம்..! செவிலியர்கள் பிரச்சனை... திருமா. வலியுறுத்தல்..!!

கடந்த பொதுத் தேர்தலில் இவ்விரு தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்த தவெக, தற்போது கணிசமான வாக்குகளின் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இது எமது கூட்டணியை மட்டுமின்றி, கூட்டணி அரசு என்கிற தவெக தலைவர் திரு. ஜோசப் விஜய் அவர்களின் மகத்தான நிலைபாட்டையும் மக்கள் முழுமையாக அங்கீகரித்துள்ளனர் என்பதையே வெளிப்படையாக உணர்த்துகிறது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
களப்பணியாற்றிய தோழர்களுக்கு நன்றி தெரிவித்த அவர், விடுதலைச் சிறுத்தைகள் அங்கம் வகிக்கும் அணியே வெற்றி பெறும்' என்பதை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், முழுமையான ஈடுபாட்டுடன் தேர்தல் களப்பணி ஆற்றிட வேண்டுமென நான் விடுத்த வேண்டுகோளை ஏற்று, தவெக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளைச் சார்ந்த தோழர்களுடன் இணைந்து மிகச் சிறப்பாகச் செயலாற்றிய என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகளுக்கும், வாக்களித்த வாக்காளப் பொதுமக்களுக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இறுதியாக, மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் நல்லாதரவோடு இடைத்தேர்தலில் வாகை சூடிய தவெக வேட்பாளர்களுக்கும், கூட்டணியின் தலைவர் மற்றும் தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களுக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வன்னியரசு அமைச்சரானது திருமாவளவனுக்கு பிடிக்கவில்லை!! பாஜக அஸ்வத்தாமன் பரபரப்பு குற்றச்சாட்டு!