சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் (வி.சி.க.) உள்ளூர் மோதல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
வி.சி.க. தலைவர் திருமாவளவன் முதலில் காட்டுமன்னார் கோயில் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்தபோது கட்சித் தொண்டர்கள் உற்சாகமடைந்தனர். ஆனால் சில நாட்களில் அவர் தன் முடிவை மாற்றிக்கொண்டார். புதுச்சேரி தேர்தல் களத்திலும் அவர் அடித்த பல்டி, தொண்டர்களை கடும் வேதனையில் ஆழ்த்தியது. இவை அனைத்துக்கும் தி.மு.க.வின் அழுத்தமே காரணம் என்று வி.சி.க. தொண்டர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திருமாவளவன் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். வேட்பாளர்களின் பெயர்களைச் சொல்லி அறிமுகம் செய்து வைத்தபோது, தே.மு.தி.க. பொதுச்செயலாளரும் விருத்தாசலம் தொகுதி வேட்பாளருமான பிரேமலதா பெயர் சொல்லப்பட்டபோது அவர் எழுந்து நிற்கவில்லை. இந்தச் சம்பவம் வி.சி.க. தொண்டர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சில தொண்டர்கள் பொதுக்கூட்டத்திலேயே சத்தம் போட்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இதையும் படிங்க: நெருங்கியாச்சு எலெக்சன்..!! விசிக தேர்தல் அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியீடு..!!

அதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து மூத்த தலைவர் தங்கபாலு பிரசாரம் செய்தபோது, வி.சி.க. வாக்கு வங்கி அதிகம் உள்ள பாவக்கல் அம்பேத்கர் நகரில் அவர் பிரசாரம் செய்யாமல் தவிர்த்தார். இதனால் அதிருப்தியடைந்த வி.சி.க.வினர் தங்கபாலுவின் பிரசார வாகனத்தை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தங்கபாலு சமாதானப்படுத்தியும் அவர்கள் கேட்கவில்லை.
இந்தச் சம்பவங்கள் தெரியவந்ததும் திருமாவளவன் தன் தொண்டர்களை கண்டித்தார். கூட்டணி கட்சிகளுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினார். “முரண்பாடு இருந்தால் பேசி தீர்வு காண வேண்டும். பொதுவெளியில் கூட்டணியில் பிளவு ஏற்படுத்தும் வகையில் செயல்படக் கூடாது” என்று தொண்டர்களுக்கு அவர் எச்சரிக்கை விடுத்தார். தேர்தல் நேரத்தில் மோதலில் ஈடுபட்ட ஐந்துக்கும் மேற்பட்டோர் மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய்யின் அரசியல் வருகையால் வி.சி.க.வின் வாக்கு வங்கி பெரும் சரிவை சந்தித்துள்ளதாகவும், தேர்தலில் நின்றால் திருமாவளவனின் வெற்றியே கேள்விக்குறியாக இருக்கும் என்ற உளவுத்துறை அறிக்கையால் அவர் பின் வாங்கியதாகவும் பேசப்படுகிறது. மேலும், தி.மு.க.விடம் அடம் பிடித்து 8 சீட்டுகளைப் பெற்றதால் கூட்டணி கட்சியினர் சிலர் வி.சி.க. மீது கடுப்பில் உள்ளதாகவும், அதனால் திட்டமிட்டே அவமதிப்பு செய்வதாகவும் கூறப்படுகிறது.
எனினும், தேர்தல் முடியும் வரை அமைதி காக்கும்படி திருமாவளவன் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதால், அவர்கள் தற்போது அமைதி காப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: பிரச்சார வாகனத்தில் ஏறிய தொண்டர்..! பதாகையால் அடித்து கீழே இறக்கிய திருமா..!!