தூத்துக்குடி புதிய துறைமுக கடற்கரை பகுதியில் மீன்பிடி தொழிலை பாதிக்கும் வகையில் செயல்படுத்தப்படும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நடுக்கடலில் பைப் லைன் பதிப்பதற்காக பணியில் ஈடுபட்ட சிறிய ரக கப்பலை பைபர் படகில் சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் முற்றுகையிட்டு போராட்டம். மீனவர்கள் போராட்டம் எதிரொலியாக குழாய் பதிக்கும் பணி நிறுத்தம்.
தூத்துக்குடி புதிய துறைமுக கடற்கரை பகுதி அருகே சுமார் 300க்கும் மேற்பட்ட மீனவர்கள் பைபர் படகுமூலம் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இங்கே தலைமுறை தலைமுறையாக கரைவலை மீன்பிடிப்பிலும் ஆண் பெண் மின் பிடி தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் புதிய துறைமுக கடற்கரை பகுதி அருகே கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்காக நடுக்கடல் பகுதியில் பைப் லைன் போடுவதற்காக சிறிய ரக கப்பல் மூலம் நடுக்கடலில் மணலை தோண்டி ஆழப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: இலங்கையில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்கள்... ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு.!
இந்த நிலையில் கருத்து கேட்புக் கூட்டத்தின் போது கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் பணிகள் மீனவர்கள் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில் உள்ள இடத்தில் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது புதிய துறைமுக கடற்கரை பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் மீனவர் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் அவர்கள் மீன்பிடிக்க கூடிய பகுதி அருகே இந்த கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்காக சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் பைப் லைன்கள் பதிக்கப்பட உள்ளன.
இதற்காக தற்போது கடலில் மண்ணை தோண்டும் பணி சிறிய ரக கப்பல் மூலம் நடைபெற்றது. இவ்வாறு மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த, இன்று தூத்துக்குடி நாட்டுப்படகு மீனவர் சங்கம் சார்பில் பொதுச் செயலாளர் ரீகன் தலைமையில் 40க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் சிறிய கப்பல் மூலம் மண்ணை தோண்டும் பணி நடைபெறும் பகுதிக்குச் சென்று கப்பலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனடியாக இந்தப் பகுதியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் கொண்டு வருவதை நிறுத்த வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோசங்களை எழுப்பினர்.
ஏற்கனவே இனிகோ நகர் கடற் பகுதியில் அனல் மின் நிலைய சாம்பல் கழிவு காரணமாக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவளம் கடற்கரை பகுதியில் கப்பல் கட்டும் தளம் அமைப்பதால் மீனவர்கள் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு தொடர்ந்து தூத்துக்குடி மாநகர பகுதி மற்றும் மாவட்டத்தில் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் கொண்டு வருகின்றன. எனவே இந்த திட்டங்களை எதிர்த்தும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டத்தை இந்த பகுதியிலிருந்து வேறு இடத்திற்கு கொண்டு செல்ல வலியுறுத்தியும் மீனவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனடியாக இந்தத் திட்டத்தை நிறுத்தாவிட்டால் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
பின்னர் துறைமுக அதிகாரிகள் மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் தாங்கள் தொழில் செய்யும் இடத்தை விட்டு துறைமுகத்தின் அருகே உள்ள இடங்களில் வைத்துக் கொள்ளுமாறு மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து அதிகாரிகள் தற்காலிகமாக வேலையை நிறுத்தியதோடு, மாற்று இடத்தை தேர்வு செய்வதாக உறுதியளித்ததை தொடர்ந்து குழாய் பதிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இதையும் படிங்க: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்... சிக்கும் சிபிஐ அதிகாரிகள்... நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!