இன்று காலை மும்பையிலிருந்து டெல்லி விமான நிலையத்தை அடைந்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கே மற்றும் அவரது இணை நிர்வாகிகள் சௌரவ் தாஸ், அசுதோஷ் ரன்கா ஆகியோர் விமானத்திற்குள்ளேயே தடுப்புக்காவலில் எடுக்கப்பட்டனர். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி ஜந்தர் மந்தரில் அமைதியான போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்த அவர்கள், விமானம் தரையிறங்கியதும் பெண் காவலர்கள் உள்ளே நுழைந்து அவர்களை அழைத்துச் சென்றனர்.
அபிஜீத் திப்கே அப்போது நேரலை ஒளிபரப்பில் “நாங்கள் அமைதியான போராட்டத்திற்கு வந்துள்ளோம். விமானத்திற்குள்ளேயே கைது செய்வது சர்வாதிகாரத்தின் அடையாளம். இந்திரா காந்தி அவசரநிலையிலும் இப்படிச் செய்யவில்லை. கைது செய்யுங்கள், நாங்கள் பயப்படவில்லை” என்று கூறியபடி வெளியேறினார்.இந்த நடவடிக்கை டெல்லியில் போராட்டத்தைத் தடுக்கும் நோக்கில் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாகக் கட்சி குற்றம்சாட்டியது. போராட்டம் அனுமதிக்கப்படவில்லை என்ற காரணத்தைக் காட்டி நூற்றுக்கணக்கானோர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர்.

மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டன, பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன, இணைய சேவை கட்டுப்படுத்தப்பட்டது, ஆயிரக்கணக்கான பாதுகாப்புப் பணியாளர்கள் குவிக்கப்பட்டனர். தலைநகரம் ஒரு கோட்டைபோல மாற்றப்பட்ட சூழலில் இளைஞர்களின் குரல் அடக்குமுறைக்கு உள்ளானது என்ற கருத்து பரவியது.இந்த சம்பவத்தைத் திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி வன்மையாகக் கண்டித்தார். “தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி நடத்தப்பட்ட அமைதியான போராட்டத்தை ஒடுக்கும் நோக்கில் விமானத்திற்குள்ளேயே அபிஜீத் திப்கேவைத் தடுத்து வைத்த செயல் கண்டிக்கத்தக்கது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் இருக்கும் பாஜகதான் தவெக.. கனிமொழி எம்பி விமர்சனம்..! போராடும் இளைஞர்களை கைது செய்வதாக காட்டம்..!
டெல்லியில் அறிவிக்கப்படாத அவசரநிலை போன்ற சூழலை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. பாதுகாப்பு என்ற பெயரில் அரசியலமைப்பு உரிமைகளை மீறுவதை ஏற்க முடியாது. மாற்றுக் கருத்துகளுக்கு இடமில்லை என்றால் ஜனநாயகத்தில் எஞ்சியிருப்பது என்ன? சர்வாதிகாரத்தால் ஜனநாயகத்தின் குரலை ஒடுக்க முடியாது. தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அறிவாலயத்தில் வெடித்தது கோஷ்டி பூசல்... கனிமொழி டீமிற்கு தாவும் சீனியர்கள்... உதறலில் உதயநிதி ஸ்டாலின்...!