தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள அதிகாரிகள் சிலர் தவெக அமைச்சர் பெயரை சொல்லி ஒப்பந்ததாரர்களை மிரட்டி வருகின்றனர் என மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பரபரப்பு குற்றச்சாட்டு. முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் நிதியில் கட்டப்பட்டதில் தற்போதைய அமைச்சர் பெயர் எப்படி போட முடியும் அமைச்சர் மதன்ராஜ் ஒரு பைசா கூட தூத்துக்குடி மாநகராட்சிக்கு வழங்கவில்லை அடுத்தவர் செய்த வேலைக்கு எப்படி மற்றவர் உரிமை கொண்டாட முடியும் அப்பா யார் என்று பாருங்கள் என மேயர் ஜெகன் பெரியசாமி காட்டம்.
தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண கூட்டம் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா துணை மேயர் ஜெனிட்டா மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டம் துவங்கியதும் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பேசும் போது, ஆட்சி மாறினாலும் எங்கள் பணி சிறப்பாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். தூத்துக்குடி மாநகரில் பல்வேறு திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். பக்கிள் ஓடை அகலப்படுத்தப்பட்டு மழைக்காலங்களில் சுமார் 2 லட்சம் கன அடி நீர் கடலுக்கு வெளியேற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். இன்னும் 50 ஆண்டுகளுக்கு தூத்துக்குடி மாநகரில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: எம்எல்ஏக்களுக்கு ராக்கி கட்டி உற்சாகம்..! பேரவை வளாகத்தில் ரக்ஷா பந்தன் கொண்டாடிய அமைச்சர் கீர்த்தனா..!
இதைத்தொடர்ந்து அதிமுக மற்றும் திமுகவிலிருந்து தமிழக வெற்றி கழகத்திற்கு மாறிய மாநகராட்சி கவுன்சிலர்கள் மந்திரமூர்த்தி மற்றும் ராமர் ஆகியோர் மாநகராட்சி மேயரிடம் மாநகராட்சி சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்ட ரேஷன் கடை கட்டிடத்தில் தற்போதைய அமைச்சர் மதன்ராஜ் பெயர் இடம் பெறவில்லை என கூறி தமிழக வெற்றி கழக கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
அதைத் தொடர்ந்து பேசிய மேயர் ஜெகன் பெரியசாமி நீங்கள் இருவரும் இன்னும் மாநகராட்சி ஆவணப்படி அதிமுக மற்றும் திமுக மாமன்ற உறுப்பினராகவே உள்ளனர் என தெரிவித்தார்
உடனே தமிழக வெற்றி கழக கவுன்சிலர் ராமர் அத்திமரப்பட்டி பகுதியில் மாநகராட்சி சார்பில் திறக்கப்பட்ட கட்டிடத்தில் அமைச்சர் மதன்ராஜ் பெயர் இல்லை என தெரிவித்தார். அதற்கு மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி அந்த கட்டிடம் முன்னாள் ஒட்டப்பிடாரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா நிதியிலிருந்து கட்டப்பட்டது. அமைச்சர் மதன்ராஜ் தூத்துக்குடி மாநகராட்சிக்கு இதுவரை ஒரு நிதி கூட வழங்கவில்லை என பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்தார். அப்படி இருக்கும்போது அமைச்சர் பெயர் எப்படி போட முடியும் என தெரிவித்தார். யாரோ செய்த வேலைக்கு யார் பெயரை வைக்க முடியுமா அதற்கு அப்பா யார் என்று பார்க்க வேண்டும் என மேயர் கூறினார்.
இதைத்தொடர்ந்து தமிழக வெற்றி கழக கவுன்சிலர் மற்றும் திமுக கவுன்சிலர்களிடையே மேயர் முன்பாக வாக்குவாதம் நடைபெற்றதால் அந்தப் பகுதியில் கூச்சக் குழப்பம் நிலவியது.
இதைத் தொடர்ந்து பேசிய மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தருவைகுளம் செல்லும் வழியில் அமைந்துள்ள குப்பை கிடங்கில் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் மரங்கள் நடப்பட்டு காடுகளாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த வாரம் அந்த பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இரண்டு அமைச்சர்கள் கலந்து கொண்டார்கள். அதில் மேயர் பெயர் போடவில்லை. நாங்கள் என்ன குற்றமா சொல்கிறோம்.
மேலும் தூத்துக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் கலந்து கொண்டார். அதிலும் என்னுடைய பெயர் போடவில்லை என தெரிவித்தார். மேலும் அந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் பணம் வாங்குவதாக புகார் வந்த நிலையில் தற்போது அமைச்சரை வைத்து நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருக்கிறார் என தெரிவித்தார்.
மேலும் தூத்துக்குடி மாநகராட்சியில் இதற்கு முன்பு வேலை பார்த்த அதிகாரிகள் தற்போது அமைச்சர் பெயரைச் சொல்லி தூத்துக்குடி மாநகராட்சி ஒப்பந்ததாரர்களை மிரட்டியும் வருகின்றனர். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த கூட்டத்தில் மாநகராட்சி மண்டல தலைவர்கள் பாலகுருசாமி கலைச்செல்வி அன்னலட்சுமி மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: PARTY FUND பதுக்கி பிரதமர் பிரச்சாரம்..! இதான் தூய ஆட்சியா CM சார்..? விளாசிய அப்பாவு.!