அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறை வழங்குவது குறித்து நடைபெற்று வரும் சட்டமன்றக் கூட்டத்தொடர் நிறைவடைந்தவுடன் தமிழ்நாடு அரசு உரிய முடிவை அறிவிக்க வேண்டும் என்றும், தவறினால் நீதிமன்றமே தகுந்த உத்தரவைப் பிறப்பிக்க நேரிடும் என்றும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை மிகத் திட்டவட்டமாக எச்சரித்துள்ளது.
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் உடல் உபாதைகளைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு மாதந்தோறும் ஊதியத்துடன் கூடிய சிறப்பு விடுமுறை வழங்க உரிய கொள்கை முடிவை எடுக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், பெண்களின் உடல்நலம், கண்ணியம் மற்றும் பணிச்சூழல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மாதவிடாய் கால விடுமுறை என்பது மிக முக்கியமானதொரு தேவையாக உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டினர்.
இதையும் படிங்க: சிஎஸ்கே புதிய தலைமை பயிற்சியாளர் யார்? செப்டம்பர் 20ல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
மேலும், தற்போது நடைபெற்று வரும் தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நிறைவடைந்த உடனேயே, அரசு மற்றும் தனியார் துறை பெண் ஊழியர்களுக்கான ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறை கொள்கை குறித்துத் தமிழ்நாடு அரசு ஆலோசித்துத் தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும் என்றும், ஒருவேளை அரசு இதில் உரிய முடிவை எடுக்கத் தவறினால் நீதிமன்றமே களமிறங்கி தகுந்த உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டி வரும் என்றும் நீதிபதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர். மதுரை உயர் நீதிமன்றக் கிளையின் இந்த அதிரடி நிலைப்பாடு பணிபுரியும் பெண்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: வால்மீகி ஊழல் வழக்கு: கர்நாடக அமைச்சர் பி.நாகேந்திரா திடீர் ராஜினாமா!