திருப்பதியை சேர்ந்த வெளிநாட்டில் மருத்துவம் படித்து வரும் இளம் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி நெருக்கமாக பழகி, பின்னர் மதமாற்றம் செய்யும்படி கட்டாயப்படுத்தியதுடன், தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதாக மிரட்டியதாக அளிக்கப்பட்ட புகாரில் இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பதியை சேர்ந்த அந்த இளம் பெண் ஜார்ஜியாவில் எம்.பி.பி.எஸ். மூன்றாம் ஆண்டு படித்து வந்தபோது, ஐதராபாத்தை சேர்ந்த ரயீத் என்பவரை சந்தித்ததாக கூறப்படுகிறது. இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்ட நிலையில், திருமணம் செய்து கொள்வதாக அவர் உறுதியளித்ததாக போலீசாரிடம் அளிக்கப்பட்ட புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இருவரும் திருப்பதியில் உள்ள தனியார் விடுதியில் சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் திருமணம் குறித்து இளம் பெண் கேட்டபோது, தனது மதத்திற்கு மாற வேண்டும் என ரயீத் வலியுறுத்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதற்கு அவர் சம்மதிக்காத நிலையில், இருவரும் தொடர்பில் இருந்தபோது எடுத்த தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாகவும், உறவினர்களுக்கு அனுப்புவதாகவும் மிரட்டியதாக புகாரில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திருப்பதி ஸ்ரீ சிட்டியில் பயங்கரம்! மருந்து தொழிற்சாலையில் பாய்லர் வெடிப்பு; 4 பேர் பலி!
இதனால் அதிர்ச்சியடைந்த இளம் பெண் தனது பெற்றோர் மூலம் திருப்பதி அலிபிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

திருப்பதி எஸ்.பி. சுப்பாராயுடு உத்தரவின் பேரில், அலிபிரி இன்ஸ்பெக்டர் ராம்கிஷோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் ஐதராபாத் சென்று, அக்பர் பாக் பகுதியில் உள்ள மலக்பேட்டையில் ரயீத் வசிக்கும் வீட்டில் வியாழக்கிழமை நள்ளிரவு அவரை கைது செய்தனர்.
பின்னர் அவரை திருப்பதிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்திய போலீசார், வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் டிஜிட்டல் ஆதாரங்களையும் கைப்பற்றினர். அவரது சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா செல்போன் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். விசாரணைக்குப் பிறகு அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ராம்கிஷோர் கூறுகையில், வெளிநாடுகள் மற்றும் பிற மாநிலங்களில் கல்வி அல்லது வேலைக்காக தனியாக வசிக்கும் இளைஞர்கள், சமூக வலைதளங்களில் அறிமுகமாகும் நபர்களை முழுமையாக அறிந்து கொள்ளாமல் நம்புவது ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என எச்சரித்தார்.
மேலும் தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மற்றவர்களிடம் பகிர்வதில் கவனம் தேவை என்றும், மிரட்டல் அல்லது இணையவழி துன்புறுத்தல் ஏற்பட்டால் உடனடியாக போலீசாரை அணுக வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். சைபர் குற்றங்களுக்கு 1930 என்ற உதவி எண்ணிலும், அவசரநிலைகளில் 112 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்! வேத ஆசீர்வாதம் பெற்றார்!