புதுமணப்பெண் ரிதன்யா தற்கொலை வழக்கில் அவரது கணவர், மாமனார், மாமியார் மூவருக்கும் நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது.
கடந்த ஜூன் மாதம் நடந்த ரிதன்யாவின் தற்கொலை, தமிழகத்தையே உலுக்கிய ஒரு நிகழ்வாகும். திருப்பூரை சேர்ந்த 27 வயது பெண் ரிதன்யா, ஏப்ரல் மாதத்தில் கவின் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணமானது பெரும் பொருட்செலவில், பல நூறு சவரன் நகை கொடுக்கப்பட்டு நடத்தி வைக்கப்பட்டது. ஆனால், திருமணமான 74 நாட்களில், ரிதன்யா தன் உயிரை மாய்த்துக்கொண்டார்.
ரிதன்யா, உயிரிழக்கும் முன்பு தனது தந்தைக்கு வாட்ஸ் ஆப்பில் வாய்ஸ் நோட்ஸ்களை அனுப்பி விட்டு உயிரை மாய்த்துக்கொண்டார். தன்னால் கணவர் மற்றும அவரது வீட்டாரின் கொடுமைகளை தாங்க முடியவில்லை என்று அவர் அதில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வர மூர்த்தி, மாமியார் சித்ராதேவி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
ரிதன்யா மரண வழக்கு விசாரணையின் முக்கிய தீர்ப்பு இன்று வந்துள்ளது. இந்த விசாரணையில், சென்னை உயர்நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட கணவர் கவின்குமார் மற்றும் ரிதன்யாவின் மாமனார் மாமியாருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டிருக்கிறது. இவர்கள் மூவரும் காலை, மாலை போலீஸில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் விதித்து உத்தரவிட்டிருக்கிறது.