தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் விவாதம் நான்காம் நாளாகத் தொடர்ந்த நிலையில், தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக முதலமைச்சர் விஜய் கொண்டுவந்த தனித்தீர்மானம் மீது உறுப்பினர்கள் தங்களது கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர். தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும் என்ற அச்சத்தை வெளிப்படுத்தும் இந்தத் தீர்மானத்துக்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி, தொகுதி எண்ணிக்கை குறைவாக இருப்பதால் வடகிழக்கு மாநிலங்களின் குரல்கள் ஒடுக்கப்படுவதாகச் சுட்டிக்காட்டினார். இதே நிலை தமிழ்நாட்டிலும் ஏற்படும் அபாயம் இருப்பதாக அவர் எச்சரித்தார். மேலும், மகளிர் இடஒதுக்கீட்டில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கு உள் இடஒதுக்கீடு அவசியம் என்று வலியுறுத்தி, முதலமைச்சரின் தனித்தீர்மானத்துக்குத் தனது கட்சி முழு ஆதரவு அளிப்பதாக அறிவித்தார்.
மனிதநேய மக்கள் கட்சியும் இதே நிலைப்பாட்டை எடுத்துள்ளது. கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா, 2029 ஆம் ஆண்டு தேர்தலிலேயே மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்றும், அடுத்த 30 ஆண்டுகளுக்கு தொகுதி மறுவரையறை மேற்கொள்ளக் கூடாது என்றும் கோரிக்கை விடுத்தார். மக்கள் தொகைக் கட்டுப்பாட்டை வெற்றிகரமாகச் செயல்படுத்திய மாநிலங்கள் தண்டிக்கப்படக் கூடாது என்பதே இந்தக் கோரிக்கையின் அடிப்படை.
இதையும் படிங்க: காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் வேண்டும்! கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் பேட்டி!

காங்கிரஸ் கட்சியும் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அமைச்சர் ராஜேஷ்குமார், வாக்கு வங்கி அரசியல் நோக்கத்துக்காகவே மத்திய பாஜக அரசு தொகுதி மறுவரையறை மசோதாவைக் கொண்டுவர முயல்கிறது என்று குற்றம் சாட்டினார். தொகுதி மறுவரையறை என்பது வெறும் எண்ணிக்கை மாற்றம் அல்ல; அது கூட்டாட்சி உரிமைகள் மற்றும் மாநிலங்களின் சம பிரதிநிதித்துவம் தொடர்பான அடிப்படைப் பிரச்சினை.
1971 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் உள்ள தற்போதைய அமைப்பை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை தென்மாநிலங்களில் வலுவாக எழுந்துள்ள நிலையில், தமிழக சட்டசபையில் இந்தத் தீர்மானம் மீதான விவாதம் தொடர்கிறது.
இதையும் படிங்க: தொகுதி மறுவரையறை மசோதா 2026: அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட கோரி பிரதமர் மோடிக்கு கார்கே கடிதம்!