பாகிஸ்தான் தீவிரவாதத்துக்கு எதிராகப் பெற்ற வெற்றியைக் கொண்டாடும் வகையில் தமிழகத்தில் தேசியக் கொடியுடன் சிந்தூர் யாத்திரை நடத்தப்போவதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவி பொது மக்களைக் கொன்று, உலக அமைதிக்கு எதிராகவும் தீவிரவாதிகளின் பயிற்சிக் கூடாரமாகவும் செயல்பட்டு வந்த பாகிஸ்தானின் தீவிரவாதத்துக்கு முடிவுகட்டும் வகையில், ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் நமது ஆயுதப்படைகளால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பலத்த சேதங்கள் ஏற்படுத்தப்பட்டன.

அந்த வகையில் வீரத்துடனும் விவேகத்துடனும் துல்லியமாகத் தாக்குதல் நடத்தி மாபெரும் வெற்றிக்கு அடிகோலிய பிரதமர் மோடியின் உறுதியான தலைமையைச் சிறப்பிக்கும் வகையில், தமிழகம் முழுவதும் தேசியக்கொடி ஏந்தியபடி 4 கட்டங்களாக யாத்திரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மாநில தலைநகரமான சென்னையில் இன்றும், இதர முக்கிய நகரங்களில் மே 15-ம் தேதியும் (நாளை), மற்ற மாவட்ட பேரூர்களில் மே 16, 17-ம் தேதிகளிலும், சட்டப்பேரவைத் தொகுதிகள், தாலுகா, பெரிய கிராமங்களில் மே 18, 23-ம் தேதிகளிலும் தேசிய கொடி ஏந்திய யாத்திரைகள் நடத்தப்படும்.

இதற்கான வழிகாட்டுதல்கள் கட்சி தலைமையிலிருந்து தொடர்ந்து நிர்வாகிகளுக்கு வழங்கப்படும். நம் வீரர்களின் வீரத்துக்கும், தியாகத்துக்கும் பாராட்டுத் தெரிவிக்கும் வகையிலும், நம் நாட்டின் வெற்றியைக் கொண்டாடும் வகையிலும் பெரிய அளவில் யாத்திரைகளை நிர்வாகிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்" என்று அறிக்கையில் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ள்ளார்.
இதையும் படிங்க: வர்த்தகத்தை பற்றி பேசவே இல்லை... ட்ரம்ப் கருத்தை அதிகாரப்பூர்வமாக மறுக்கும் இந்தியா!!
இதையும் படிங்க: CBSE 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின.. கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு..!