சுகாதாரமற்ற முறையில் இடியாப்பம் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, பொதுமக்களின் நலன் கருதி இந்த வழிகாட்டுதல்களை உணவுப் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், குறிப்பாகச் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் காலை மற்றும் இரவு நேரங்களில் சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களில் இடியாப்பம் விற்பனை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவர்களில் ஒரு சிலர் சுகாதாரமற்ற முறையிலும், தரம் குறைந்த பொருட்களைக் கொண்டும் இடியாப்பம் தயாரித்து விற்பனை செய்வதாக உணவுப் பாதுகாப்புத் துறைக்குத் தகவல்கள் கிடைத்தன. இதன் அடிப்படையில், இடியாப்பம் விற்பனையாளர்களுக்குப் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, இடியாப்பம் விற்பவர்கள் அனைவரும் முறையாக உணவுப் பாதுகாப்புத் துறை உரிமத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இந்த உரிமத்தை இணையதளம் (Online) வழியாக இலவசமாகவே பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் என்றும், ஆண்டுக்கு ஒருமுறை இதனைப் புதுப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இடியாப்பம் தயாரிக்கும்போது தரமான மூலப்பொருட்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும், பொதுமக்களுக்கு விற்பனை செய்யும்போது விற்பனையாளர்கள் கட்டாயம் கையுறை மற்றும் தலையுறை அணிந்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மக்களைக் காப்போம்... தமிழகத்தை மீட்போம்..! EPS மீண்டும் பரப்புரை...!
நோய் தொற்று அல்லது காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் இடியாப்ப விற்பனையில் ஈடுபடக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விற்பனையாளர்கள் எந்தவிதமான உடல்நலப் பாதிப்பும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்துகொண்டு விற்பனை செய்ய வேண்டும் என உணவுப் பாதுகாப்புத் துறை கேட்டுக்கொண்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றத் தவறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: விபத்துகளுக்குத் திமுக அரசின் அலட்சியமே காரணம்!” - அண்ணாமலை கடும் சாடல்!