தமிழக மின்சாரத் துறையில் கடந்த ஆண்டுகளில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் மற்றும் நிதி இழப்புகள் தொடர்பாக அடுத்த வாரம் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று மின்சாரம் மற்றும் சட்டத் துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
மதுரை அவனியாபுரத்தில் முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டியை தொடங்கி வைத்த பிறகு அவர் செய்தியாளர்களிடம் இந்த தகவலை தெரிவித்தார்.
அப்போது பேசிய அமைச்சர், மின்சாரத் துறையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், அவை குறித்து அரசு தீவிரமாக ஆய்வு செய்து வருவதாகவும் கூறினார். முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். முந்தைய ஆட்சிக் காலத்தில் ஏற்பட்டதாக கூறப்படும் பல்வேறு முறைகேடுகள் தற்போது வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: முதல்வராக விஜய்க்கு முதல் பிறந்தநாள்! நாளை வெளியாகிறது முக்கிய அறிவிப்பு! ப்ளாஸ்ட்டு ப்ளாஸ்டு!
மேலும், நெல்லை மற்றும் உடுமலைப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரத் துறை தொடர்பான பணிகளில் இடைத்தரகர்கள் ஆதிக்கம் செலுத்தியதாக குற்றம்சாட்டிய அவர், அத்தகைய செயல்பாடுகளில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

மின்சார சேவைகளை முழுமையாக வெளிப்படையாக மாற்றும் நோக்கில் புதிய இணையதள போர்டல் ஒன்று அடுத்த 10 நாட்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். இதன் மூலம் மின்சார இணைப்பு மற்றும் அனுமதி தொடர்பான செயல்முறைகள் எளிமையாக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மின்சாரத் துறையின் தற்போதைய நிதி நிலை, ஏற்பட்ட இழப்புகள், கண்டறியப்பட்ட முறைகேடுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் வெள்ளை அறிக்கையில் இடம்பெறும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். இந்த அறிக்கை பொதுமக்களுக்கு துறையின் உண்மை நிலையை விளக்கும் முக்கிய ஆவணமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
அதே நேரத்தில், டிரான்ஸ்பார்மர் ஊழல் வழக்கில் விசாரணை விரைவாக முன்னேற வேண்டும் என்றும், அரசு நிதியை தவறாக பயன்படுத்தியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார். மேலும், சில முக்கிய வழக்குகளில் நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்படுவது குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அமைச்சர் நிர்மல்குமார் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு, தமிழக அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சவுமியா அன்புமணியை பாராட்டிய முதல்வர் விஜய்! பாமகவின் 46 ஆண்டுகால போராட்டத்திற்கு வெற்றி?