தமிழகத்தில் விக்கிரவாண்டி உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் இன்று அதிகாலை முதல் உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை, ஏப்ரல் 1 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய இரண்டு தேதிகளில் திருத்தியமைக்கப்பட்ட சுங்கக் கட்டண விகிதங்கள் தொடர்பான அறிவிப்பு வழக்கமாக வெளியிடப்படும்.
அந்த வகையில், விழுப்புரம், விக்கிரவாண்டி, செங்குறிச்சி, வாலாஜாபாத், சமயபுரம், திருச்சி, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள முக்கிய சுங்கச்சாவடிகளில் இன்று அதிகாலை முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: மிகப்பெரிய ஷாக்... மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு... நேபாளத்திற்கு மற்றொரு எச்சரிக்கை மணி...!
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் 900-க்கும் மேற்பட்ட இடங்களில் சுங்கச்சாவடிகள் உள்ள நிலையில், தமிழகத்தில் 6,606 கிலோமீட்டர் நீளத்துக்கு தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இதில் 5,134 கிலோமீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகள் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் நேரடியாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் மொத்தம் 77 இடங்களில் சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில் ஆறு வகைப்பாட்டின் அடிப்படையில் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில், குறிப்பிட்ட சுங்கச்சாவடிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்திலும், மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1-ம் தேதியும் சுங்கக் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும்.
இந்த ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் காரணமாக, ஏப்ரல் மாதத்தில் பல்வேறு சுங்கச்சாவடிகளில் உயர்த்தப்பட வேண்டிய சுங்கக் கட்டணம் தாமதமாக, ஜூன் மாதத்தில்தான் அறிவிக்கப்பட்டது.
அப்போதே பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தனர். குறிப்பாக, சட்டமன்றத் தேர்தல் முடிந்த உடனேயே சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டதாக அவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள மொத்தம் 77 சுங்கச்சாவடிகளில், தற்போது 25-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, ஏப்ரல் மாதத்தில் கட்டணம் உயர்த்தப்பட்ட சுங்கச்சாவடிகளைத் தவிர, மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் தற்போது கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில், விழுப்புரம், விக்கிரவாண்டி, செங்குறிச்சி, வாலாஜாபாத், சமயபுரம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
உதாரணமாக, விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை எடுத்துக்கொண்டால், கார், ஜீப், பயணிகள் வேன் உள்ளிட்ட வாகனங்களுக்கு ஒரு வழிப் பயணத்துக்கான கட்டணம் ரூபாய் 105-லிருந்து ரூபாய் 110-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, ரூபாய் 5 உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல், பலமுறை பயணம் செய்வதற்கான கட்டணம் ரூபாய் 160-லிருந்து ரூபாய் 165-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதிலும் ரூபாய் 5 அதிகரிக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்சமாக வாகன வகைப்பாட்டின் அடிப்படையில் ரூபாய் 5 முதல் அதிகபட்சமாக ரூபாய் 25 வரை பல்வேறு சுங்கச்சாவடிகளில் கட்டண விகிதங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
சுங்கக் கட்டண விகிதங்கள் மாற்றம் செய்யப்பட்டிருப்பது ஒருபுறம் இருக்க, பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு இயக்கச் செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
இதன் காரணமாக, வரும் நாட்களில் வாகனங்களில் எடுத்துச் செல்லப்படும் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலையும் கணிசமாக உயர்வதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: சுரங்கத்தில் சிக்கிய 933 பேர் கதி என்ன?... மீட்புபணிக்கு இடையே வெளியான எச்சரிக்கை... இந்தியாவுக்கு காத்திருக்கும் பேராபத்து...!