அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பிரிக்ஸ் (BRICS) அமைப்பு நாடுகளுக்கு கூடுதலாக 10% வரி விதிக்கப்படும் என அறிவித்து, உலக வர்த்தகத்தில் புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளார். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகியவற்றுடன், எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை பிரிக்ஸ் உறுப்பு நாடுகளாக உள்ளன. ட்ரம்ப், இந்த நாடுகள் “அமெரிக்க எதிர்ப்பு கொள்கைகளை” ஆதரிப்பதாகவும், அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தை சீர்குலைக்க முயல்வதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த அறிவிப்பு, 2025 ஜூலை 6-7 இல் ரியோ டி ஜெனிரோவில் நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் போது வெளியிடப்பட்டது. ட்ரம்பின் இந்த அச்சுறுத்தல், 2024 இல் அவர் 100% வரி விதிக்கப்படும் என எச்சரித்ததைத் தொடர்ந்து வந்தது. அவர், பிரிக்ஸ் நாடுகள் தனி நாணயத்தை உருவாக்கினால் அல்லது டாலருக்கு மாற்று நாணயத்தை ஆதரித்தால், அவற்றின் பொருட்களுக்கு 100% வரி விதிக்கப்படும் என முன்னர் கூறியிருந்தார். இந்த மிரட்டல், பிரிக்ஸ் நாடுகள் உலக வர்த்தகத்தில் டாலரின் ஆதிக்கத்தைக் குறைக்க முயல்வதாக அவர் கருதுவதால் எழுந்தது.
இதையும் படிங்க: நோபல் பரிசை ட்ரம்புக்கு கொடுங்க!! அசீம் நசீரை தொடர்ந்து வக்காலத்துக்கு வரும் நெதன்யாகு!
பிரிக்ஸ் அமைப்பில் உள்ள நாடுகள் யாராக இருந்தாலும், விரைவில் 10 சதவீத கட்டணம் வசூலிக்கப்படும். அமெரிக்காவை காயப்படுத்தவே பிரிக்ஸ் அமைப்பு உருவாக்கப்பட்டது. நமது டாலரை சீரழிக்கவும் அமைக்கப்பட்டது. டாலர் தான் ராஜா. அதனை பிரிக்ஸ் அமைப்பு அழிக்க முயற்சி செய்கிறது. நாங்கள் அதை அப்படியே வைத்திருக்கப் போகிறோம். அதற்கு சவால் விட விரும்பினால், அவர்களால் முடியும். ஆனால் அவர்கள் பெரிய விலையை கொடுக்க வேண்டியிருக்கும். அவர்களில் யாரும் அந்த விலை கொடுக்க தயாராக இருப்பதாக நான் நினைக்கவில்லை. டாலருக்கு சவால் விடும் நாடுகள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். ஒரு வருடம் முன்பும் நான் சொன்னேன் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
உங்களிடம் இங்கே டாலர்கள் இருக்காது. உலகத் தரமான டாலரை நாம் இழந்தால், அது ஒரு உலகப் போரில் தோற்றது போன்றது. புதிய வரி விதிப்புகளின்படி, ஆகஸ்ட் 1ம் தேதி 2025ம் ஆண்டு முதல் வரிகள் வந்து குவியும். இந்த தேதியில் எந்த மாற்றமும் இருக்காது எனவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, “உலகத்திற்கு ஒரு பேரரசர் தேவையில்லை” எனக் கூறி, ட்ரம்பின் அறிவிப்பை விமர்சித்தார். ரஷ்யாவின் கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், பிரிக்ஸ் எந்தவொரு நாட்டையும் எதிர்க்கவில்லை எனவும், பொதுவான உலகக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் ஒத்துழைப்பதாகவும் தெரிவித்தார்.பிரிக்ஸ் உச்சி மாநாட்டில், உறுப்பு நாடுகள் ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டு, ஒருதலைப்படுத்தப்பட்ட வரிகள் உலக வர்த்தகத்தை பாதிக்கின்றன என்று விமர்சித்தன. அவர்கள், டாலரின் ஆதிக்கத்தைக் குறைத்து, உள்ளூர் நாணயங்களில் வர்த்தகத்தை மேம்படுத்துவது குறித்து விவாதித்தனர்.
இருப்பினும், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர், பிரிக்ஸ் நாணயம் உருவாக்குவதை எதிர்த்து, உள்ளூர் நாணய வர்த்தகத்தை மட்டுமே ஆதரிப்பதாகக் கூறியுள்ளனர்.ட்ரம்பின் வரி அச்சுறுத்தல், ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. அவர், 14 நாடுகளுக்கு வரி விகிதங்கள் குறித்த கடிதங்களை அனுப்பியுள்ளார். இந்தியா, அமெரிக்காவுடனான வர்த்தக உறவுகளை பேணுவதற்கு முயற்சித்தாலும், விவசாயம் மற்றும் பால் பொருட்கள் தொடர்பான பிரச்சினைகளில் உறுதியாக உள்ளது.
பிரிக்ஸ் நாடுகள், உலக மக்கள் தொகையில் 40% மற்றும் உலகளாவிய ஜிடிபியில் 40% பங்களிக்கின்றன. இந்த நிலையில், ட்ரம்பின் இந்த நடவடிக்கை உலகப் பொருளாதாரத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பொருளாதார வல்லுநர்கள், இந்த வரிகள் அமெரிக்க நுகர்வோருக்கு விலைவாசி உயர்வை ஏற்படுத்தும் என எச்சரிக்கின்றனர்.
இதையும் படிங்க: 100 ஆண்டுகள் காணாத பேய்மழை.. 100-ஐ கடந்த பலி எண்ணிக்கை.. 45 நிமிடங்களில் 26 அடி உயர்ந்த டெக்சாஸ் வெள்ளம்..!