ஸ்விட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார மன்றத்தின் (World Economic Forum - WEF) 56-வது ஆண்டு வருடாந்திர கூட்டம் ஜனவரி 21, 2026 அன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது உரையைத் தொடர்ந்து இந்திய ஊடகமான Moneycontrol-க்கு அளித்த சிறப்பு பேட்டியில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை மிகுந்த பாராட்டுடன் குறிப்பிட்டார்.
நிருபர்கள் எழுப்பிய இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், "உங்கள் பிரதமர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவர் ஒரு அற்புதமான மனிதர், என்னுடைய சிறந்த நண்பர். நமக்கு நல்ல ஒப்பந்தம் அமையும் (We are going to have a good deal)" என்று உற்சாகத்துடன் தெரிவித்தார்.
இந்த கருத்து, சமீபத்தில் அமெரிக்க வர்த்தகத் துறை அமைச்சர் ஹோவர்ட் லுட்னிக் அளித்த அறிக்கையுடன் ஒப்பிடும்போது மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளது. லுட்னிக், "இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் தயாராக இருந்தது. அதை இறுதி செய்ய பிரதமர் மோடி அதிபர் டிரம்ப்புடன் தொலைபேசியில் பேச வேண்டும் என்று கூறினேன்.
இதையும் படிங்க: மோடி நல்லவரு தான்!! ஆனா நான் சந்தோஷமா இல்ல! புலம்பலா? மிரட்டலா? ட்ரம்ப் புது ரூட்!
ஆனால் இந்திய பிரதமர் அதற்கு மறுத்துவிட்டார். இதனால், இந்தியாவை விட பின் தங்கியிருந்த வியட்நாம், இந்தோனேசியா போன்ற நாடுகள் முன்னேறி ஒப்பந்தங்களை ஏற்படுத்திக்கொண்டன" என்று கூறியிருந்தார். இந்திய வெளியுறவு அமைச்சகம் இதை "துல்லியமற்றது" என்று மறுத்திருந்தது. மேலும், இரு தலைவர்களும் 2025-இல் 8 முறை தொலைபேசியில் உரையாடியதாகவும் தெரிவித்தது.
இந்நிலையில், டாவோஸ் மாநாட்டில் டிரம்ப் அளித்த நேர்மறையான கருத்து, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு இன்னும் வலுவாக உள்ளதை வெளிப்படுத்துகிறது.

அமெரிக்கா சில இந்திய பொருட்களுக்கு 50% வரை உயர் வரி விதித்துள்ள சூழலில், டிரம்ப்பின் இந்த பாராட்டு வர்த்தக பேச்சுவார்த்தைகளுக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. இருப்பினும், விவசாயம், பால் பொருட்கள், ரஷிய எண்ணெய் இறக்குமதி போன்ற முக்கிய பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை.
டிரம்ப்-மோடி இடையேயான தனிப்பட்ட நட்பு மற்றும் பரஸ்பர மரியாதை, இரு நாடுகளின் வர்த்தக உறவை மேம்படுத்தும் முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது. இந்தியா-அமெரிக்கா இடையேயான Bilateral Trade Agreement (BTA) விரைவில் கையெழுத்தாகும் என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது. இது இரு நாடுகளின் பொருளாதாரத்திற்கும் பெரும் பலனை அளிக்கும் என்பது உறுதி.
இதையும் படிங்க: சொன்னதை செஞ்சுட்டாரு மோடி! ட்ரம்ப் கூட பேச மறுத்துட்டாரு!! புலம்பும் அமெரிக்க அமைச்சர்!