வாஷிங்டன்: ஈரானுடனான போர் விரைவில் முடிவுக்கு வரும் என்றும், அமெரிக்கா வெற்றி பெறும் என்றும் அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். போர் முடிவடைந்ததும் அமெரிக்காவில் பணவீக்கம் குறைந்து, பெட்ரோல் விலை கணிசமாக சரியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
வாஷிங்டனில் உள்ள ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், மோதலை முடிவுக்கு கொண்டு வர முயற்சி செய்து வரும் மத்தியஸ்தர்களுடன் அமெரிக்க அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்தார். ஈரான் போரில் அமெரிக்கா “மிக விரைவில்” வெற்றி பெறும் என்றும், இந்த விவகாரம் ஒரு வழியாக விரைவாக முடிவுக்கு வரும் என்றும் அவர் கூறினார்.
போர் முடிவடைந்த பின்னர் பெட்ரோல் விலை கடுமையாகக் குறையும் என டிரம்ப் குறிப்பிட்டார். ஈரானுக்கு எதிராக அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதற்கான காரணத்தையும் அவர் விளக்கினார்.
இதையும் படிங்க: அமெரிக்க தேர்தலுக்கு பின் மீண்டும் குண்டு வீச திட்டம்?! ஈரான் விவகாரத்தில் டிரம்பின் அடுத்த திட்டம்!
எதிர்கால அச்சுறுத்தல்களைத் தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், அமெரிக்காவுக்கு மட்டுமின்றி உலக நாடுகளுக்கும் ஏற்படக்கூடிய மிகப்பெரிய ஆபத்தைத் தடுப்பதே நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.

இஸ்ரேல் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்பட்டிருக்கக்கூடிய சூழலை அமெரிக்காவின் நடவடிக்கை தடுத்ததாகவும் டிரம்ப் கூறினார். ஈரான் அணு ஆயுதத்தைப் பெறும் அபாயத்தைத் தடுப்பதற்காகவே அமெரிக்கா நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இதற்கிடையே, போர் முடிவடைவதற்கான காலக்கெடு குறித்து டிரம்ப் தெரிவித்துள்ள நம்பிக்கைக்கு மாறாக, மோதலை முடிவுக்கு கொண்டுவரும் பேச்சுவார்த்தைகளில் இன்னும் உறுதியான உடன்பாடு ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை. எண்ணெய் விநியோகம் மற்றும் ஹோர்முஸ் நீரிணை தொடர்பான நிலவரமும் உலக எரிசக்தி சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
ஈரான் போர் காரணமாக அமெரிக்காவில் பெட்ரோல் விலை மற்றும் பணவீக்கம் தொடர்பான அழுத்தம் தொடரும் நிலையில், போர் முடிந்தால் எரிபொருள் விலை குறையும் என்று டிரம்ப் ஏற்கனவே பலமுறை கூறியுள்ளார். ஆனால், விலை குறைவு எவ்வளவு விரைவாகவும் எந்த அளவிலும் ஏற்படும் என்பது சந்தை நிலவரங்கள் மற்றும் விநியோகச் சூழலைப் பொறுத்தே அமையும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
நவம்பர் மாத அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்கு முன்னதாக மோதல் மற்றும் பொருளாதார நிலவரம் முக்கிய விவாதமாக உள்ள நிலையில், டிரம்பின் சமீபத்திய கருத்துகள் சர்வதேச அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன.
இதையும் படிங்க: நியூயார்க்கில் டிரம்ப்பை சந்திக்கும் ஜெலென்ஸ்கி! உக்ரைன் போரில் அடுத்த திருப்பம்? பரபரப்பான அறிவிப்பு!