எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுக கட்சியின் அடிப்படை விதியான சாதாரண கடை நிலை தொண்டனும் கட்சியின் பொது செயலாளர் ஆகலாம் என்ற விதியினை மாற்றி கட்சியின் பொதுச் செயலாளராக போட்டியிட விரும்புவோர் இத்தனை மாவட்ட செயலாளர்கள் ஆதரவு வேண்டும் என தனக்கு சாதகமாக விதியை மாற்றியது எடப்பாடி பழனிச்சாமியின் திருவிளையாடல் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றச்சாட்டு.
கும்பகோணம் அருகே பாபநாசத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று இரவு நடைபெற்றது.இதில் இக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டார்.
முன்னதாக செய்தியாளர்களை டிடிவி தினகரன் சந்தித்தார் அப்போது, மாற்றப்பட்டுள்ள அண்ணா திமுகவின் விதிகளை எம்ஜிஆர் காலத்தில் இருந்த விதிகளாக மாற்ற வேண்டும் என ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளாரே என்ற கேள்விக்கு, அவர் கூறுவது உண்மைதான். எம்ஜிஆர் காலத்தில் அண்ணா திமுகவில் கடைசி தொண்டனும் கட்சியின் பொதுச் செயலாளராக ஆகலாம் என விதி உள்ளது. அந்த விதியினை எடப்பாடி பழனிச்சாமி தனக்கு சாதகமாக மாற்றி உள்ளார். மாநில கட்சியின் பொதுச் செயலாளராக போட்டியிட விரும்புவோர், தனக்கு இத்தனை மாவட்ட செயலாளர்கள் ஆதரவு வேண்டும் என மாற்றப்பட்டுள்ளது. இது எடப்பாடி பழனிசாமியின் திருவிளையாடல் என தினகரன் குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: பரபரக்கும் அரசியல் களம்.. நாளை டெல்லி செல்கிறார் இபிஎஸ்.. அமித்ஷாவுடன் முக்கிய மீட்டிங்..!!
டெல்லியின் பெயரை சொல்லி 2017 இல் எங்களை வெளியேற்றினார்கள்.கால சக்கரம் சுழல்கிறது. தற்போது அதிமுக, இடம் பெற்றுள்ள கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி என அறிவிக்கப்பட்டால் நாங்கள் அதில் இடம்பெற மாட்டோம் எனதெரிவித்து வருகிறோம்.
2017 இல் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆரம்பித்தபோது அப்போது எவ்வளவு தொண்டர்கள் இருந்தார்களோ அப்படியே இன்றும் நீடிக்கிறார்கள், ஆனால் நிர்வாகிகள் சிலர் சுய லாபம், சுயநலம் ஆகியவற்றால் கட்சி மாறி உள்ளனர். இப்போது கூட அதிமுகவினர் கட்சி மாற எங்கள் கட்சி நிர்வாகிகளை விலை பேசி வருகிறார்கள். தற்போது அதிமுக பிள்ளை பிடிக்கும் கட்சியாக மாறி உள்ளது என டிடிவி தினகரன் காட்டமாக பதில் அளித்தார்.
எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்ளும் கூட்டங்களுக்கு அதிக மக்கள் வருகிறார்களே, என கேட்டதற்கு அது அழைத்து வரப்படும் கூட்டம்.அது உங்களுக்கும் நன்றாகவே தெரியும் என தினகரன் மேலும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அப்ப மறுபடியும் PATCH UP தான் போலயே! நயினாரை சந்திப்பேன்... இறங்கி வந்த ஓபிஎஸ்