பாஜக தலைமையிலான கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நீடித்து வருகிறது. தேர்தல் நேரங்களில் கூட்டணி கட்சிகளோடு இணைந்து தொகுதி பிரித்து வேட்பாளர் நியமனம் செய்வது வழக்கம். ஆனால் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை டிடிவி தினகரன் அறிவித்துள்ள சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

கூட்டணி கட்சிகளை கலந்து ஆலோசிக்காமல் டிடிவி தினகரன் வேட்பாளர் அறிவித்துள்ள சம்பவம் கூட்டணி தர்மத்திற்கு எதிரானது என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. 2026 சட்டமன்ற பொது தேர்தலில் அமமுக வேட்பாளராக சோளிங்கர் தொகுதியில் போட்டியிடப் போகும் உங்கள் வீட்டுப் பிள்ளை, உங்கள் சட்டமன்ற உறுப்பினர்., அம்மா அவர்களின் கொள்கைக்காக அம்மாவின் வளர்ச்சிக்காக விலைபோகாத தங்கம் பார்த்திபன் போட்டியிட உள்ளதாக டிடிவி தினகரன் பேசி இருந்தார்.
இதையும் படிங்க: கந்து வட்டி புகார்.. அமமுக நிர்வாகியை அலேக்காக தூக்கிய போலீஸ்..!

மேலும், பார்த்திபனை வெற்றி பெற செய்வதன் மூலம் திமுகவின் சாவு மணி அடிக்கப்படுவது சோளிங்கர் தொகுதியில் தொடங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் சோளிங்கர் தொகுதியில் 50,000 வாக்குகள் பெற்று பாமக இரண்டாம் இடம் பிடித்திருந்தது. ஆனால் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சோளிங்கரில் 12000 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தது.

பாட்டாளி மக்கள் கட்சியின் கூட்டணி பாஜகவோடு உறுதி செய்யப்பட்டால் வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ள பாமகவிற்கு சோளிங்கர் தொகுதி ஒருவேளை ஒதுக்கப்படலாம். ஆனால் அந்தத் தொகுதியில் ஏற்கனவே பாஜக கூட்டணியில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர் பெயரை டிடிவி தினகரன் அறிவித்திருக்கும் சம்பவம் கூட்டணி தர்மத்தை மீறுவதாக உள்ளது எனக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அதிமுகவுடன் கூட்டணி… பாஜகவுடன் இணைந்து திமுக போடும் வேஷம்… தோலுரித்த விஜய்..!