தூத்துக்குடி மக்களின் பல ஆண்டுகாலப் போராட்டத்திற்கும், கோரிக்கைக்கும் இன்று மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. இதுவரை ஆங்கிலத்தில் Tuticorin Airport என்று அதிகாரப்பூர்வமாக அழைக்கப்பட்டு வந்த தூத்துக்குடி விமான நிலையத்தின் பெயரை, இனி 'Thoothukudi Airport' என மாற்றுவதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் முதல் புழக்கத்தில் இருந்த Tuticorin என்ற பெயர், தமிழ் மொழி உச்சரிப்பிற்கு ஏற்ப Thoothukudi என மாற்றப்பட வேண்டும் எனத் தமிழக அரசு மற்றும் பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இந்த நீண்ட காலக் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு தற்போது பெயர் மாற்றத்திற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது.
மக்களின் உணர்வுகளுக்கும், அந்த மண்ணின் கலாச்சார அடையாளத்திற்கும் மதிப்பளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். இதன் மூலம் இனி விமானப் பயணச்சீட்டுகள், அறிவிப்புப் பலகைகள் மற்றும் சர்வதேச விமானப் போக்குவரத்துப் பதிவுகளில் 'Thoothukudi' என்ற பெயரே இடம்பெறும்.
இதையும் படிங்க: +2 மாணவி படுகொலை... பிணவறையை முற்றுகையிட்ட உறவினர்கள்..! பதற்றம்..!!

இந்த அறிவிப்பிற்குத் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் மற்றும் தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். முத்துநகரம் என்று அழைக்கப்படும் தூத்துக்குடியின் அடையானம் சிதையாமல் காக்க இந்த நடவடிக்கை உதவும் என சமூக ஆர்வலர்கள் பாராட்டியுள்ளனர்.
இந்தத் திடீர் அறிவிப்பைத் தொடர்ந்து, விமான நிலைய முனையத்திலுள்ள பெயர்ப் பலகைகள், இணையதளப் பதிவுகள் மற்றும் டிஜிட்டல் திரைகளில் பெயர்களை மாற்றும் பணிகள் உடனடியாகத் தொடங்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே சென்னை, மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களின் பெயர்கள் மாற்றப்பட்ட வரிசையில், தற்போது தூத்துக்குடி விமான நிலையமும் தனது உண்மையான தமிழ் உச்சரிப்பைப் பெற்றுள்ளது ஒரு வரலாற்றுத் தருணமாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இதுதான் சமூக நீதியா ஸ்டாலின் அவர்களே? தூத்துக்குடி மாணவன் மீதான தாக்குதலுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!