தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் விவகாரம் தற்போது போலி கடிதப் புகார் மற்றும் குதிரை பேரக் குற்றச்சாட்டுகளால் பெரும் போர்க்களமாக மாறியுள்ளது. அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
ஆளுநரைச் சந்தித்து எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவுக் கடிதம் வழங்கிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி.தினகரன் கூறியதாவது. மன்னார்குடி அமமுக எம்.எல்.ஏ. காமராஜ், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தருவதாகக் கொடுத்த கடிதத்தை மாற்றி, அவர் தவெக-விற்கு ஆதரவு அளிப்பதாகப் போலியான கடிதத்தைத் தவெக தரப்பினர் தயாரித்துள்ளனர். இது மிகப்பெரிய முறைகேடு.
தற்போது அமமுக எம்.எல்.ஏ காமராஜைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. தவெக குதிரை பேரத்தில் (Horse Trading) ஈடுபடுகிறதோ என்ற பலமான சந்தேகம் எழுகிறது.
இதையும் படிங்க: நாங்கள் இன்னும் NDA-வில்தான் இருக்கிறோம்! விஜய்க்கு ஆதரவு என்ற செய்தியை மறுத்தார் டி.டி.வி.தினகரன்!

ஊழல், தீய சக்தி எனப் பேசிவிட்டு, முதல் நாளிலேயே விஜய் குதிரை பேரம் நடத்துகிறார். தீய சக்தி எனக் கூறிய திமுக-வின் கூட்டணிக் கட்சிகளிடமே ஆதரவு கோருவது ஏன்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவிக்கும் அசல் கடிதத்தைத் தான் ஆளுநரிடம் நேரில் வழங்கியுள்ளதாகத் தெரிவித்த தினகரன், தவெக தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் கடிதங்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
தவெக (108) + காங்கிரஸ் (5) + இடதுசாரிகள் (4) என 117 இடங்கள் உறுதியாகியுள்ள நிலையில், மெஜாரிட்டிக்குத் தேவையான 118-வது இடத்திற்காகத் தவெக தரப்பு அமமுக எம்.எல்.ஏ-வை அணுகியதாகக் கூறப்படும் புகார், விஜய் தரப்பிற்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. மறுபுறம், விசிக தலைவர் திருமாவளவன் இப்போதும் ஸ்டாலினுடன் ஆலோசனையில் இருப்பதால், 118 என்ற இலக்கை எட்ட விஜய் பெரும் போராட்டத்தைச் சந்தித்து வருகிறார்.
தமிழகத்தின் புதிய முதலமைச்சர் யார் என்பதைத் தீர்மானிக்க வேண்டிய ஆளுநர், தற்போது எழுந்துள்ள இந்த ‘போலி கடித’ புகாரால் தனது முடிவை நிறுத்தி வைக்கவும் வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
இதையும் படிங்க: வீட்ல கூட பாதுகாப்பில்ல..! புரையோடும் கஞ்சா...! TTV தினகரன் காட்டம்..!!