தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குச் சில வாரங்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய் அவர்களுக்குச் சிபிஐ (CBI) அதிரடியாகச் சம்மன் அனுப்பியுள்ளது. கரூர் வன்முறைச் சம்பவம் மற்றும் கட்சியின் நிதி விவகாரங்கள் தொடர்பாக விளக்கம் அளிக்க, வரும் மார்ச் 15-ஆம் தேதி டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த மாதம் கரூரில் தவெக பேரணியின் போது ஏற்பட்ட வன்முறை மற்றும் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கைச் சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தில் ஏற்கெனவே கட்சியின் முக்கிய நிர்வாகிகள் விசாரிக்கப்பட்ட நிலையில், தற்போது விஜய்க்குச் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

சிபிஐ அதிகாரிகள் சென்னையிலேயே விசாரணை நடத்த தவெக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அதனை மறுத்த சிபிஐ, டெல்லிக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது. இதனை ஏற்றுக்கொண்ட விஜய், மார்ச் 14-ஆம் தேதி இரவு அல்லது 15-ஆம் தேதி அதிகாலை டெல்லிக்குப் புறப்படுவார் எனத் தெரிகிறது.
இதையும் படிங்க: சிபிஐ விசாரிக்க வேண்டிய முதல் நபர் செந்தில் பாலாஜி! விஜய்க்கு சம்மன் அனுப்பியதற்கு நிர்மல் குமார் கண்டனம்!
விஜய்யின் மக்கள் செல்வாக்கைக் கண்டு அஞ்சி திமுக அரசு சிபிஐ-யைத் தூண்டிவிடுகிறது. இந்த வழக்கில் முதலில் விசாரிக்கப்பட வேண்டியவர் அமைச்சர் செந்தில் பாலாஜி தான் எனத் தவெக பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் விஜய்யைப் பிரசாரக் களத்திலிருந்து முடக்குவதற்காகவே இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகத் தவெக தொண்டர்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.
டெல்லியில் விஜய்யிடம் நடத்தப்பட உள்ள விசாரணை மற்றும் அவர் தரப்பில் அளிக்கப்பட உள்ள ஆதாரங்கள் குறித்து தவெக சட்டக் குழுவினர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: "திமுகவின் நெருக்கடிகளுக்கு அஞ்சமாட்டோம்": சென்னையில் தவெக ஆதவ் அர்ஜுனா ஆவேசம்!