தமிழக அரசியலில் மாற்றத்திற்கான வித்து எனத் தன்னை முன்னிறுத்திக்கொண்டுள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக), தனது அரசியல் பயணத்தின் மிக முக்கியமான மைல்கல்லை நாளை எட்டுகிறது. அக்கட்சியின் தலைவர் திரு. விஜய் அவர்கள், வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான தமிழகத்தின் 234 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியின் 30 தொகுதிகள் என மொத்தம் 264 வேட்பாளர்களையும் நாளை (மார்ச் 29, ஞாயிற்றுக்கிழமை) முறைப்படி அறிவிக்கிறார்.
பெரம்பூர் பிரசாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் அரசுக்கும் தவெக-விற்கும் இடையே மோதல் முற்றியுள்ள சூழலில், இந்த வேட்பாளர் அறிமுக விழா மிகுந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் இந்த மாநில அளவிலான நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. காலை 11 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கி, மதியம் வரை வேட்பாளர் அறிமுகம் மற்றும் தலைவரின் சிறப்புரை இடம்பெறும். 264 வேட்பாளர்களையும் மேடையில் அறிமுகம் செய்து வைத்து, அவர்களுடன் தலைவர் விஜய் புகைப்படம் எடுத்துக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: திமுக கூட்டணியில் விசிக போட்டியிடும் 8 தொகுதிகள்! அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியீடு!

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், இது ஒரு உள்ளரங்க நிகழ்ச்சியாக மட்டுமே நடைபெறும். கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்கள் என அனுமதிக்கப்பட்ட 500 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தவெக வேட்பாளர்கள் அனைவரும் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட சின்னமான 'விசில்' சின்னத்தில் போட்டியிட உள்ளனர். ஏற்கனவே திமுக மற்றும் அதிமுக கூட்டணிகள் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுப் பிரசாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், விஜய்யின் இந்த அறிவிப்பு மும்முனைப் போட்டியை இன்னும் விறுவிறுப்பாக்கும்.
மக்களுக்கான ஜனநாயக அரசியலைத் தவெக முன்னெடுத்துச் செல்லும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் தெரிவித்துள்ளார். நாளை அறிவிக்கப்படவுள்ள பட்டியலில் இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: எடப்பாடியார் மீண்டும் தோற்பார்! முக்குலத்தோர் புலிப்படை கருணாஸ் அதிரடி!