தமிழகத்தில் தற்போது அரசியல் பேரிடர்க்காலம் ஏற்பட்டுள்ளதாக திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்குத் தமிழக வெற்றிக் கழகம் மிகக் கடுமையான, அனல் பறக்கும் பதிலடியைக் கொடுத்துள்ளது. திமுகவின் ஆட்சிக்காலம் முழுவதும் தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் ஏற்பட்டதே உண்மையான பேரிடர்க்காலம் என்று தவெக தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் சாடியுள்ளது.
உதயநிதி ஸ்டாலினின் விமர்சனத்திற்குப் புள்ளிவிவர ரீதியாகப் பதிலடி கொடுத்து தவெக வெளியிட்டுள்ள அறிக்கையில், எது உண்மையான பேரிடர்க்காலம் என்பது குறித்துப் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. பேரறிஞர் அண்ணா உருவாக்கிய பேரியக்கத்தை, அவரது குடும்பத்தைக் கூட ஒதுக்கித் தள்ளிவிட்டு, ஐம்பெரும் தலைவர்கள் வரிசையில்கூட இடம் பெற்றிராத ஒரேயொரு குடும்பம் மட்டுமே ஒட்டுமொத்தமாகக் கைப்பற்றியதுதான் தமிழக அரசியலுக்கு ஏற்பட்ட ஆகப் பெரிய பேரிடர்க்காலம் என்று தவெக விமர்சித்துள்ளது. மேலும், அண்ணாவிற்குப் பிறகு கலைஞரை முதல்வராகவும் தலைவராகவும் ஆக்கப் பேருதவியாக இருந்த எம்.ஜி.ஆரை, எவ்வித நன்றி விசுவாசமும் இன்றித் தூக்கி வீசிய ஒரு குடும்பத்தால் உருவானதுதான் இந்த மாநிலத்தின் அரசியல் பேரிடர்க்காலம் என்றும், அவர்களின் முந்தைய ஆட்சிக் காலம் முழுவதும் தமிழக மக்களுக்குப் பேரிடராகவே அமைந்தது என்றும் தவெக சுட்டிக்காட்டியுள்ளது.

தொடர்ந்து, தற்போதைய சூழல் தீயசக்தி திமுகவிற்குத்தான் உண்மையான பேரிடர்க்காலமாக மாறியுள்ளது என்று தவெக விளக்கியுள்ளது. ஆட்சி அதிகாரத்தை வைத்துக் கொள்ளையடித்த திமுகவிற்கு, இனி அரசியலில் கொள்ளையடிக்க இயலாத நிலையைத் தமிழக வெற்றிக் கழகத்தின் வருகை உண்டாக்கியுள்ளதே அவர்களுக்கு ஏற்பட்டுள்ள அரசியல் பேரிடர் என்று குறிப்பிட்டுள்ளது. லஞ்சம், ஊழலற்ற நிர்வாகத்தை உருவாக்கி வரும் தவெகவின் மனசாட்சி உள்ள மக்களாட்சியைக் கண்டு திமுக அஞ்சி நடுங்குவதாகவும், கடந்த காலங்களில் அடித்த கொள்ளையால் அகப்பட்டு, தலைமறைவாகவும் வெளிநாட்டு மருத்துவமனைகளிலும் பதுங்கித் திரியும் திமுகவின் முன்னாள் அமைச்சர்களுக்குத்தான் இது பேரிடர்க்காலம் என்றும் அறிக்கை சாடியுள்ளது. அந்த முன்னாள் அமைச்சர்கள் சிக்கினால், அவர்களின் முக்கியக் குடும்பமும் சேர்ந்து சிக்கி, திக்கித் திணறுமோ என்ற பயமே திமுகவை ஆட்டிப்படைக்கிறது என்றும் தவெக வாதாடியுள்ளது.
இதையும் படிங்க: அது தற்கொலை... ஆணவக்கொலை என திரிப்பது தவறான அரசியல்! அன்புமணி ராமதாஸ் சாடல்!
இறுதியாக, கடந்த காலத் தீயசக்தி திமுகவின் பிடியில் இருந்து தப்பிய தமிழக மக்களுக்குத் தற்போதைய காலம் ஒரு அழகிய தென்றல் காலமாகவும், அகமகிழும் பேரின்பக் காலமாகவும் மாறியுள்ளது என்று தவெக பெருமிதம் தெரிவித்துள்ளது. தவெகவின் மக்கள் செல்வாக்கைக் கண்டு பயந்து, இப்படி உளறியாவது உண்மையை ஒப்புக்கொண்ட உதயநிதிக்கு வாழ்த்துகள் என்று கூறி அந்த அறிக்கை நிறைவு பெற்றுள்ளது.
இதையும் படிங்க: தவெக-வில் இணைந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிரடி! முதல்வர் வருகைக்காக கரூரில் மெகா ஆய்வு!