தமிழக வெற்றிக்கழகத்தின் கொடிக்கு எதிராக தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை தலைவர் பச்சையப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த அமைப்பு, தமிழக அரசின் பதிவுத்துறையில் பதிவு செய்யப்பட்ட ஒரு அறக்கட்டளையாக செயல்பட்டு வருகிறது. இவர்களது கூற்றுப்படி, சிவப்பு-மஞ்சள்-சிவப்பு நிறங்களைக் கொண்ட ஒரு கொடியை 2023ஆம் ஆண்டு உருவாக்கி, அதற்கு வர்த்தக முத்திரை உரிமையைப் பெற்றுள்ளனர்.
இந்த வர்த்தக முத்திரைப் பதிவின் அடிப்படையில், இந்த அமைப்பு மட்டுமே குறிப்பிட்ட நிறங்களைக் கொண்ட கொடியைப் பயன்படுத்த உரிமை உள்ளதாக வாதிடுகிறது. ஆனால், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம், 2024ஆம் ஆண்டு தங்கள் கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தியபோது, அதில் இதே சிவப்பு-மஞ்சள்-சிவப்பு நிறங்களைப் பயன்படுத்தியதாக மனுதாரர் குற்றஞ்சாட்டினார்.

இதனால், தவெக கட்சியின் கொடி நிறங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், தங்கள் கொடியை தவறாகப் பயன்படுத்தியதற்காக 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டது.இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் ஜூலை மாதம் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், தங்கள் அமைப்பின் கொடியைப் பயன்படுத்துவது குழப்பத்தை ஏற்படுத்தும் என்று வாதிட்டார். இதற்கு நீதிபதி, வர்த்தக முத்திரை உரிமை பொருட்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், அது ஒரு அரசியல் கட்சியின் கொடிக்கு எவ்வாறு பொருந்தும் என்றும் கேள்வி எழுப்பினார். இந்த வாதங்களை அடுத்து, நீதிபதி தவெக கட்சி மற்றும் அதன் தலைவர் விஜய் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி, இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: விசாரணைக்கு வாங்க... ஜெகத்ரட்சகனுக்கு எதிரான ED நோட்டீஸுக்கு சுப்ரீம் கோர்ட் தடை!
இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது வாதங்களைக் கேட்ட நீதிபதி, சிவப்பு, மஞ்சள், சிவப்பு நிறத்தில் கொடியை பயன்படுத்த தமிழக வெற்றி கழகத்திற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மனுதாரர் கொடியை ஒப்பிடும்போது தமிழக வெற்றி கழகத்தின் கொடி முற்றிலும் மாறுபட்டது என்று தமிழக வெற்றி கழகத்தின் தரப்பில் வாதிடப்பட்டது. இரு கொடிகளை ஒப்பிடும்போது தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தும் என கூற முடியாது என நீதிபதி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நலம் காக்கும் ஸ்டாலின்! குட்டு வைத்த நீதிமன்றம்.. ரூ.1 லட்சம் அபராதம் விதித்து வழக்கு தள்ளுபடி..!