சென்னை: தமிழக அரசியலில் பெரும் திருப்புமுனையாக, வி.சி.க. உள்ளிட்ட கம்யூனிஸ்ட் கட்சிகள் த.வெ.க.,வுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளன. தி.மு.க., கூட்டணியில் இருந்து இழுத்தடித்து வந்த இந்தக் கட்சிகள், நேற்று முன்தினம் நள்ளிரவு வரை நடைபெற்ற தொடர் சந்திப்புகளுக்குப் பின் நிலைப்பாட்டை மாற்றியுள்ளன.
த.வெ.க., கட்சி தொடங்கிய காலம் முதலே அதை வலுப்படுத்த விஜய் விரும்பினார். ஆனால், தி.மு.க., தலைவர் மு.க. ஸ்டாலின் தன் கூட்டணிக் கட்சிகளை இறுக்கமாகப் பிடித்திருந்தார். தேர்தல் முடிவுகளுக்குப் பின் பெரும்பான்மை இல்லாத நிலையிலும் விஜய் அழைப்பு விடுத்தபோதும் அவர்கள் வர மறுத்தனர்.
இந்நிலையில், தி.மு.க.,-அ.தி.மு.க., இணைந்து விஜயை வீழ்த்த உதயநிதி ஸ்டாலின் முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது. இதை ஸ்டாலின் விரும்பவில்லை என்பதும், விஜய் ஆட்சி அமைத்தால் அவரது தவறுகளை மக்களிடம் எடுத்துச் செல்லலாம் என்பது அவரது திட்டம் என்பதும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இதையும் படிங்க: தவெக விஜய்க்கு ஆதரவு தாங்க!! திருமாவளவன், டி.ராஜாவிற்கு கார்கே கோரிக்கை!
எனினும், உதயநிதியின் உறுதியான எதிர்ப்பை அறிந்த ஸ்டாலின், வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் வீரபாண்டியன் ஆகியோரை அழைத்துப் பேசினார். அப்போது “உங்கள் எண்ணம் போல் செய்யுங்கள்” எனக் கூறியதாகத் தெரிகிறது.

இதைத் தொடர்ந்து, மே 7ஆம் தேதி இரவு 10 மணி முதல் 12 மணி வரை போயஸ் கார்டனில் உள்ள த.வெ.க., தேர்தல் மேலாண்மை பொதுச் செயலர் ஆதவ் அர்ஜுனாவை திருமாவளவன் சந்தித்தார்.
அப்போது, “த.வெ.க., ஆட்சி அமைக்க உதவினால், விஜய் ராஜினாமா செய்யும் தொகுதியை உங்களுக்கு ஒதுக்குகிறோம். வெற்றி பெற்றால் துணை முதல்வர் பதவியும் தரப்படும்” என ஆதவ் அர்ஜுனா உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே த.வெ.க.,வுக்கு ஆதரவான மனநிலையில் இருந்த திருமா இதை ஏற்றுக்கொண்டார்.
அதே நேரத்தில் தி.நகரில் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மற்றொரு முக்கிய சந்திப்பு நடைபெற்றது. மதுரை எம்.பி. சு.வெங்கடேஷன், செயலர் சண்முகத்தைச் சந்தித்தபோது, தி.மு.க.,-அ.தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தால் பா.ஜ.க.,வுக்கு உதவியது போலாகும் என எச்சரித்தார். அவ்வாறு முடிவெடுத்தால் தான் எம்.பி. பதவியை ராஜினாமா செய்வதுடன் செயற்குழு உறுப்பினர்களையும் ராஜினாமா செய்ய வைப்பேன் எனக் கூறியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வீரபாண்டியனும் த.வெ.க.,வுக்கு ஆதரவு கொடுக்கும் நிலைக்கு வந்தார். பின்னர் மூவரும் வாட்ஸ்அப் கான்பரன்ஸ் மூலம் பேசி இறுதி முடிவெடுத்தனர். தங்கள் கட்சியினரிடம் வலியுறுத்திய பின்னர் ஆதரவுக் கடிதத்தை தயாரித்தனர்.
மேலும், எ.வ.வேலுவை சந்தித்து மரியாதை நிமித்தம் திருமாவளவன் பேசியதும் குறிப்பிடத்தக்கது. வி.சி.க.,வுக்கு பல வகையில் உதவிய வேலுவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த சந்திப்பு அமைந்தது. இந்த மாற்றம் தமிழக அரசியல் சமன்பாட்டை பெரிதும் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அதிரும் அரசியல் களம்..! விசிக அலுவலகத்திற்கு செல்லும் விஜய்..? பலத்த போலீஸ் பாதுகாப்பு..!