தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நாளை முதல் சுற்றுப்பயணம் தொடங்க உள்ளார். விஜய் சுற்றுப்பயணத்தின் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை அக்கட்சி வெளியிட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகம், தகுதி மற்றும் பொறுப்பு மிக்க ஓர் அரசியல் பேரியக்கம் என்பதை நமது ஒவ்வொரு செயலிலும் காட்ட வேண்டியது நமது தலையாய கடமை என்றும் நம் தலைவர் விஜய் மீது நீங்கள் கொண்டிருக்கும் எல்லையில்லா அன்பினால் மனம் நெகிழ்ந்துள்ள அவர், இந்தச் சுற்றுப் பயணத்தின்போது உங்களைச் சந்திப்பதற்கு மிகவும் ஆவலாக இருக்கிறார் எனவும் தெரிவித்து உள்ளது.
ஆனாலும் தமிழக மக்களை உயிராகப் போற்றி மதிக்கும் அவர், தன்னை நேசிக்கும் மக்களின் பாதுகாப்பில் எள்ளளவும் சமரசம் செய்துகொள்ளாதவர் என்றும் எனவே நம் வெற்றித் தலைவர் இந்த மக்கள் சந்திப்புச் சுற்றுப் பயணத்தின்போது கழகத் தோழர்களும் பொதுமக்களும் பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. நிகழ்ச்சிக்கு வரும் போதும், நிகழ்ச்சியை முடித்துவிட்டுச் செல்லும் போதும் அவரது வாகனத்தை யாரும் இருசக்கர வாகங்களில் அல்லது வேறு வாகனங்களில் பின்தொடர வேண்டாம் என்றும் கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள், முதியவர்கள், உடல்நலம் குன்றியோர். பள்ளிச் சிறுவர், சிறுமியர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோர், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் நேரில் வந்து கலந்துகொள்வதைத் தவிர்த்து, வீட்டில் இருந்தபடியே நேரலையில் கண்டு மகிழுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கழகத் தோழர்கள் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அனைத்து வகையான வரவேற்பு நடவடிக்கைகளையும் தவிர்க்கவும் வாகனங்களை நிறுத்தும் பொழுது, பிறருக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் நிறுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: அண்ணன் வர்றாரு... வெடிய போடு! அரியலூரில் விஜய் பிரச்சாரம் நடத்த போலீஸ் அனுமதி
பிறர் மனம் புண்படும் வகையில் பேசுவதோ அல்லது நடந்துகொள்வதோ கண்டிப்பாகக் கூடாது எனவும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் கட்டடங்கள், காம்பவுண்ட் சுவர்கள், மரங்கள், மின் விளக்குக் கம்பங்கள் உள்ளிட்டவை அருகில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், பிளக்ஸ் பேனரோ, அலங்கார வளைவுகளோ, கொடி கட்டப்பட்ட கம்பிகளோ உரிய அனுமதி பெறாமல் வைக்கக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உங்க விஜய் நா வரேன்! தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணத்திற்கான இலட்சினை வெளியீடு...