சென்னை: தமிழக அரசியலில் மீண்டும் கட்சி தாவல் குறித்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க.வைச் சேர்ந்த 5 எம்.எல்.ஏ.க்களிடம் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தரப்பில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக அக்கட்சி வட்டாரங்களை மேற்கோள் காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.க்களிடம் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
சட்டசபை தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க.வில் இருந்து சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஜெயகுமார், இசக்கி சுப்பையா, சத்தியபாமா, மரகதம் ஆகிய 6 எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்ததாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர்களுக்கு தற்போது த.வெ.க.வில் கட்சிப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், மேலும் சில அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் கொண்டு வர த.வெ.க. தரப்பு முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் தனித்தொகுதிகளைச் சேர்ந்த 2 எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட 5 பேர் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தவெக அரசின் முதல் கேள்வி நேரம்..! விறுவிறுப்பாக தொடங்கிய சட்டப்பேரவை..! பதில் அளிக்கும் அமைச்சர்கள்..!!

தற்போதைய அரசியல் சூழலில், அ.தி.மு.க.வில் இருந்து ஏற்கனவே 6 பேர் விலகியிருப்பது, மற்ற சில எம்.எல்.ஏ.க்களிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக த.வெ.க. தரப்பு கருதுவதாக கூறப்படுகிறது. இதை சாதகமாக பயன்படுத்தி, அதிருப்தியில் உள்ளவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், த.வெ.க.வுக்கு ஆதரவு அளித்து வரும் கூட்டணி கட்சிகளிடையேயும் சில விவகாரங்களில் அதிருப்தி நிலவுவதாக அந்த கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. குறிப்பாக இடதுசாரி கட்சிகள் ஆதரவை திரும்பப் பெற்றால், சட்டசபையில் த.வெ.க. அரசுக்கு சிக்கல் ஏற்படக்கூடும் என்ற கணக்கும் அக்கட்சி தரப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் ஆட்சிக்கு தேவையான பெரும்பான்மையை உறுதி செய்யும் வகையில், கூடுதல் எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் கொண்டு வருவதற்கான அரசியல் நகர்வுகள் நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சூழலில், தற்போது பேச்சுவார்த்தையில் இருப்பதாக கூறப்படும் 5 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் சட்டசபை கூட்டத்தொடர் முடிந்த பின்னர் த.வெ.க.வில் இணைய வாய்ப்புள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் தாமதமின்றி வந்தால் கட்சியின் அமைப்புப் பணிகளில் இணைந்து செயல்பட வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், இந்த 5 எம்.எல்.ஏ.க்களின் பெயர்கள் உள்ளிட்ட விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. எனவே, தற்போதைய தகவல்கள் த.வெ.க. வட்டாரங்களின் தகவல்களாக மட்டுமே பார்க்கப்படுகின்றன. உண்மையில் யார் கட்சி மாறப் போகிறார்கள் என்பது சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் அடுத்தகட்ட முடிவுக்குப் பிறகே தெரியவரும்.
இதையும் படிங்க: சமூக நீதியில் விஜய் அரசின் அடுத்த அதிரடி? இன்று சட்டப்பேரவையில் முக்கிய விவாதம்!