சமீப காலமாக அதிகரித்து வரும் போதைப் பொருள் பழக்கமும், அதனால் ஏற்படும் உயிரிழப்பும், குடும்ப மற்றும் சமுதாய சீர்க்கேடும் பெருகி விட்டதை அன்றாட செய்திகளில் காண முடிகிறது. அதுவும், பதின்ம இளம் பருவத்தினரிடையே இதன் புழக்கம் அதிகரித்து வருகிறது. இந்தவகையில், போதைப்பொருள் போன்ற தவறான பழக்கத்தில் ஒரு போதும் ஈடுபடக் கூடாது. ஈடுபடவும் வேண்டாம் என்று தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு தொடர்ந்து அட்வைஸ் கொடுத்து வருகிறார்.
அதேபோல் அரசு டாஸ்மாக் வைத்து குடிப்பழக்கத்தை அதிகரித்தது, தமிழகத்தில் தலைவிரித்தாடும் போதைப்பொருள் புழக்கம் போன்றவையும் குறித்தும் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இந்நிலையில் செங்குன்றம் அருகே வீட்டிற்குள் 10 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததாக தவெக நிர்வாகி கைது செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த கட்சியினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த விளாங்காடு பக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட சிருங்காவூர் கிராமத்தில் வீடு ஒன்றில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பெயரில் செங்குன்றம் தனிப்படை காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வீடு ஒன்றில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை எடுத்து 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த தமிழக வெற்றிக்கழக நிர்வாகி கண்ணன் (34) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிருங்காவூர் கிராம கிளை கழக பொருளாளராக கண்ணன் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரூர் சம்பவம்... உச்சநீதிமன்றத்தை நாடுவோம்... முதல்வர் ஸ்டாலின் உறுதி...!
பாஜக, அதிமுக, திமுக வரிசையில் தற்போது கஞ்சா பதுக்கியதாக தவெக நிர்வாகியும் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இவர்கள் தான் நாளை கட்சியில் மிகப்பெரிய பொறுப்பிற்கு வந்து மக்களுக்கு நல்லது செய்யப்போகிறவர்களா? இவர் மீது தமிழக வெற்றிக் கழகம் நடவடிக்கை எடுக்குமா? என்றெல்லாம் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.
இதையும் படிங்க: எடப்பாடி 'OUT' விஜய் ‘IN' - பீகார் தேர்தல் பார்முலாவை கையில் எடுக்கும் அமித் ஷா...!