விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள பணிக்கனேந்தல் கிராமத்தில் பெண்ணை கட்டிப்போட்டு 21 பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட பரபரப்பு வழக்கில், தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) நிர்வாகி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கொள்ளையடிக்கப்பட்ட 21 பவுன் தங்க நகைகள் தங்கக் கட்டிகளாக மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
காரியாபட்டி அருகே உள்ள பணிக்கனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த பில்டிங் காண்ட்ராக்டரான பெரியசாமியின் மனைவி அன்னலட்சுமி, கடந்த ஜூலை 15ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டிற்கு வந்த இரண்டு பேர், "சித்தப்பா எங்களை கொத்தனார் வேலைக்கு வரச் சொன்னார்" என்று கூறி வீட்டிற்குள் நுழைந்து பின்னர் குடிக்க தண்ணீர் கேட்ட நிலையில், அவர்களை வீட்டிற்குள் அமர வைத்துவிட்டு அன்னலட்சுமி தண்ணீர் எடுக்கச் சென்றபோது, அவரைப் பின்தொடர்ந்த இருவரும் அவரது கைகளை கட்டி, வாயில் பிளாஸ்டர் ஒட்டி, கழுத்தில் அணிந்திருந்த 21 பவுன் தங்க நகைகளை பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர்.
விசாரணையில், சத்திரப்புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த அலங்காரகுமார் (எ) ரமேஷ், மற்றும் சிவகாசியை சேர்ந்த அருண் (எ) சங்கரபாண்டி ஆகியோர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து காரியாபட்டி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சார்பு ஆய்வாளர் வீரணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
இதையும் படிங்க: “மகளிர் அணியில் பதவி வாங்கித் தர்றேன்...” - இளம் பெண்ணை ஆசை வார்த்தைக்கூறி சீரழித்த தவெக மா.செ... ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்...!
அலங்காரகுமார் என்பவர் மீது கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, மேல்முறையீட்டிலும் தண்டனை உறுதி செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்து வந்த நிலையில் உயர்நீதிமன்றம் மதுரை கிளை அவரை கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டது போலீசாரிடம் சிக்காமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், வீடு விற்பனை தொடர்பாக அலங்காரகுமார், தமிழக வெற்றிக் கழகத்தின் விருதுநகர் மாவட்ட இளைஞரணி இணைச் செயலாளர் சரவணகுமாரிடம் தொடர்பில் இருந்ததாகவும், அவரின் அறிவுறுத்தலின் பேரில் கொள்ளை திட்டமிடப்பட்டதாகவும் போலீசார் விசாணையில் தெரிவித்துள்ளனர்.
அப்போது வீட்டில் தனியாக இருந்த அன்னலட்சுமியின் கழுத்தில் அணிந்திருந்த 21 பவுன் தங்க நகையை திருடி தர்மபுரி மாவட்டத்தில் தலைமறைவாகிய அலங்காரகுமார் மற்றும் அருண் ஆகியயோரை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் த.வெ.க. விருதுநகர் மாவட்ட இளைஞரணி இணைச் செயலாளர் சரவணகுமார் இந்த கொள்ளைச் சம்பவத்திற்கு உதவியதாகக் கூறி அவரையும் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மூவரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட 21 பவுன் தங்க நகைகள் தங்கக் கட்டிகளாக மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் மேலும் ஒருவரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த வழக்கில் த.வெ.க. மாவட்ட நிர்வாகி கைது செய்யப்பட்டிருப்பது விருதுநகர் மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஆகஸ்ட் 5 வரை வெயிட் பண்ணுங்க.. பட்ஜெட்டில் செம ட்விஸ்ட் இருக்கு! அமைச்சர் மரிய வில்சன் தகவல்!