காஞ்சிபுரம் மாவட்டம் சிங்காடிவாக்கத்தில் இருளர் பழங்குடியினப் பெண் தேன்மொழியும் அவரது பச்சிளம் குழந்தையும் உரிய மருத்துவ உதவி கிடைக்காமல் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.விறகு வியாபாரி ஆறுமுகத்திடம் ரூ.20 ஆயிரம் முன்பணம் பெற்றிருந்த அக்குடும்பம், கடந்த சில மாதங்களாக விறகு வெட்டும் பணியில் ஈடுபட்டு வந்ததாகவும், பணியிடத்தில் தார்ப்பாய் கூடாரத்தில் தங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது.
நிறைமாத கர்ப்பிணியான தேன்மொழிக்கு பிரசவ வலி ஏற்பட்டபோது, கடனை அடைக்காமல் வெளியே செல்லக் கூடாது எனக் கூறி மருத்துவமனைக்குச் செல்லத் தடுத்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு மிகவும் கொடூரமானது என வேல்முருகன் சுட்டிக்காட்டியுள்ளார்.“ரூ.20 ஆயிரம் கடனுக்காக தாய் சேய் உயிரிழக்க வேண்டுமா? பழங்குடியின மக்களின் உழைப்பை அடமானமாக்கும் கொடுமை தொடர்வது எப்படி?” என்று கேள்வி எழுப்பிய அவர், இது வெறும் மரணமா அல்லது மறைந்திருக்கும் கொத்தடிமை முறையின் அடையாளமா என கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்பணம் அல்லது கடன் கொடுத்து, அதற்குப் பதிலாகத் தொழிலாளர்களின் உழைப்பையும் நடமாட்டத்தையும் கட்டுப்படுத்துவது சட்டவிரோதமானது என அவர் வலியுறுத்தியுள்ளார்.இந்தச் சம்பவத்தை வெறும் சந்தேக மரணமாகக் கருதாமல், மருத்துவ உதவி மறுக்கப்பட்டதற்கான காரணம், கடன் ஊதியக் கணக்கு, பணியிடத்தில் தங்க வைக்கப்பட்ட விதம், தொழிலாளர்களின் சுதந்திரம் உள்ளிட்ட அனைத்தையும் தமிழ்நாடு அரசு முழுமையாக விசாரிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: பருவமழை ஆலோசனை கூட்டத்திற்கு திமுக கவுன்சிலர்கள் வராதது வருத்தம்! அமைச்சர் மரிய வில்சன் பேட்டி!
குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால், தொடர்புடையவர்கள் மீது கொத்தடிமைத் தொழிலாளர் ஒழிப்பு சட்டம், பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், கொலைப்பிரிவு உள்ளிட்ட பொருந்தக்கூடிய சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்து உடனடியாகக் கைது செய்ய வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.மேலும், காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் உள்ள விறகுக் கிடங்குகள், கரி உற்பத்தி மையங்கள், செங்கல் சூளைகள் உள்ளிட்ட தொழிலிடங்களில் பழங்குடியின மக்கள் கொத்தடிமைகளாகப் பயன்படுத்தப்படுகிறார்களா என்பதைச் சிறப்புக் குழு அமைத்து அரசு ஆய்வு செய்ய வேண்டும் என வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: பயிர்க் கடன் தள்ளுபடி செய்யாத தவெகவுக்கு எதிர்ப்பு! இடைத்தேர்தலில் பிரச்சாரம் என விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை!