தமிழக அரசியல் களத்தில் புதிய கூட்டணி கணக்கு உருவாகுமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையகமான சென்னை பனையூரில் இன்று முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், கூட்டணி கட்சிகளின் எதிர்கால அரசியல் வியூகம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூட்டத்தில் பங்கேற்பதற்காக விஜய் முன்கூட்டியே பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு வந்ததாக கூறப்படுகிறது. தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்களும் கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் அல்லது பிரதிநிதிகள் இந்த ஆலோசனையில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பனையூர் அலுவலகம் அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: அடி தூள்...!! - இனி அரசு மருத்துவமனைக்கு போறீங்களா?... இதை கட்டாயம் கொண்டு செல்லக்கூடாது...!
வரும் அக்டோபர் 6-ம் தேதி நடைபெற உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்கள் தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த இரு தொகுதிகளிலும் தவெக மேற்கொள்ள வேண்டிய தேர்தல் பணிகள், கூட்டணி கட்சிகளின் பங்களிப்பு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படலாம்.

அதேபோல், தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தவெக தலைமையில் வலுவான கூட்டணியை அமைப்பது குறித்தும் ஆலோசனை நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, பல்வேறு கட்சிகளை ஒரே அணிக்குள் கொண்டு வருவதற்கான அரசியல் முயற்சிகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதற்கிடையே, தவெக தலைமையில் உருவாகும் கூட்டணிக்கு இன்றைய கூட்டத்தில் பெயர் சூட்டப்படலாம் என்றும் அரசியல் வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது. மேலும், கூட்டணியின் தலைவராக விஜய்யை தேர்வு செய்வது தொடர்பாகவும் முடிவு எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.
ஏற்கெனவே திமுக, அதிமுக தலைமையில் தனித்தனி அரசியல் அணிகள் உருவாகி வரும் நிலையில், தவெக தலைமையில் புதிய கூட்டணி வலுப்பெற்றால் தமிழக தேர்தல் களம் மேலும் பரபரப்படைய வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். குறிப்பாக, இரு பிரதான திராவிட கட்சிகளின் கூட்டணி கணக்கில் மாற்றத்தை ஏற்படுத்தும் அளவுக்கு புதிய அணி உருவாகுமா என்பதே இன்றைய கூட்டத்தின் மீதான முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க: 10 வயதில் எடுத்த சபதம்! 20 வயதில் நடந்த கொலை! ரீல்ஸால் வந்த பகை! தவெக நிர்வாகி கொலை வழக்கில் திடீர் திருப்பம்!