கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் ரயில்வே கிராசிங்கை கடக்க முயன்ற பள்ளி வேன் ரயில் மோதி விபத்துக்குள்ளானது. பலமாக வேன் தூக்கி வீசப்பட்ட சம்பவத்தில் மூன்று மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த வாகனத்தின் ஓட்டுனர் மற்றும் மற்றொரு மாணவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே கேட் கீப்பர் தான் இந்த விபத்துக்கு காரணம் என்றும் அவர் தூங்கி இருந்ததாகவும் ரயில்வேகேட் திறந்தே இருந்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். தற்போது மட்டுமல்லாமல் எப்போதுமே அந்த கேட் கீப்பர் செல்போன் பார்த்துக் கொண்டும் தூங்கிக் கொண்டும் மெத்தனமாக தான் இருப்பார் எனவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஓட்டுநர் கூறியதால் கதவை திறந்ததாக அவர் கூறிய நிலையில், தாங்கள் கேட் கீப்பரை பார்க்கவே இல்லை என்ற தகவலை உயிர் பிழைத்த ஓட்டுனர் மற்றும் மாணவர் ஆகியோர் தெரிவித்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழக அரசின் சார்பிலும் ரயில்வே துறை சார்பிலும் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த விபத்துக்கு காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: 2 கோடி உறுப்பினர்கள்...2026 இலக்கு! தவெக நிர்வாகிகளுக்கு பயிற்சி பட்டறை!

இந்த நிலையில் ரயில் விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். வேன் மீது ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் மாணவர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த செய்தி, அதிர்ச்சியும் மிகுந்த மன வேதனையையும் அளிப்பதாக கூறினார். விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்வதாகவும் விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் பூரண நல்லத்துடன் விரைவில் வீடு திரும்ப இறைவனை பிரார்த்திப்பதாகவும் விஜய் கூறி உள்ளார்.

விபத்து நடைபெற்ற பகுதியில் சுரங்கப் பாதை அமைக்க முடிவெடுத்தும் அதற்கு ஒரு வருடமாக மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் அளிக்கவில்லை எனச் செய்திகள் வெளியாகி இருப்பதை சுட்டிக்காட்டிய விஜய், விபத்து நடைபெற்ற இடத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாக பயணிக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: செப்டம்பரில் சுற்றுப்பயணம்...டெல்டா தான் டார்கெட்! ஸ்கெட்ச் போட்ட விஜய்...