திமுக கூட்டணிக்குள் தேமுதிக இணைந்தது முதலே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது. சட்டமன்ற தேர்தலில் 6 முதல் 8 சீட் வழங்குவதாக கூறப்படுவது தான் இந்த கட்சிகளை அதிருப்தியாக்கி உள்ளது. காலம் காலமாக கூட்டணியில் இருக்கும் தங்களை விட அதிகமாக தேமுதிகவுக்கு சீட் வழங்கப்படுகிறதே? என்பது தான் விசிக, 2 கம்யூனிஸ்ட்டுகளை கோபப்படுத்தியுள்ளது. இதனால் சிபிஐ மற்றும் விசிக உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ளது.
இதனிடையே, திமுக கூட்டணியிலிருந்து தமிழக வாழ்வுரிமை கட்சி வெளியேற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு, தமிழக வாழ்வுரிமை கட்சி முதற்கட்ட பேச்சு வார்த்தை நடத்தியது. கூடுதல் இடங்களை ஒதுக்க வேண்டும் என்று அந்த கட்சியினுடைய தலைவர் வேல்முருகன் வலியுறுத்தினார். தொடர்ந்து சென்னையில் நடைபெற்ற கட்சியுடைய உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டமானது நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் இடங்களை ஒதுக்க வேண்டும் என்று வேல்முருகன் வலியுறுத்தினார். இல்லையென்றால் கூட்டணியை விட்டு வெளியேறுவோம் என்று தெரிவித்திருந்தார். இதுவரை திமுகவிடமிருந்து கூடுதல் இடங்களை ஒதுக்குவதாக எந்த பதிலும் கிடைக்காததால் வேல்முருகன் திமுக கூட்டணிலிருந்து வெளியேறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: வீட்டுக்கு ஒருத்தரா? புரிதல் இல்லாத இளம் தலைமுறை... விஜய் மறைமுகமாக சாடிய வேல்முருகன்..!!
தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பாக தனித்து போட்டி என்பதை அறிவிக்கவுள்ள வேல்முருகன், நாளை மறுதினம் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலையும் வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அந்த கட்சியுடைய நிர்வாகிகளோடு அந்தந்த பகுதிகளில் ஆலோசனையில வேல்முருகன் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது. கடந்த தேர்தலில் பண்ருட்டி தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில போட்டியிட்டு வேல்முருகன் வெற்றி பெற்ற நிலையில், தற்பொழுது தனித்து போட்டியிடுவது திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக வட மாவட்டங்களில் இருக்கக்கூடிய சில தொகுதிகளில் தமிழக வாழ்வுரிமை கட்சி வாக்கு வங்கி இருப்பதாகவும் அந்த தொகுதிகளை குறிவைத்து தனித்து போட்டியிட இருப்பதாகவும் தற்போதைய தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: பறக்கும் படை அதிகாரிகளின் திமுக விஸ்வாசம்..! அதிகார துஷ்பிரயோகம்... TVK அருண்ராஜ் ஆவேசம்..!!