தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று சென்னையில் நடத்திய ரோடு ஷோவின் போது ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. தான் போட்டியிடும் பெரம்பூர் மற்றும் கட்சி வேட்பாளர் போட்டியிடும் தி.நகர் பகுதிகளில் வாக்குச் சேகரித்தபோது, மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் சிலைக்கு அவர் முத்தமிட்டுத் தனது மரியாதையைச் செலுத்தினார்
சென்னையின் முக்கிய வீதிகள் வழியாகத் திறந்த வாகனத்தில் விஜய் ரோடு ஷோ மேற்கொண்டார். வழிநெடுகிலும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, கூட்டத்தில் இருந்த தொண்டர் ஒருவர் சிறிய அளவிலான எம்.ஜி.ஆர் சிலையை விஜய்யிடம் வழங்கினார்.
தொண்டர் வழங்கிய அந்தச் சிலையைப் பெற்றுக்கொண்ட விஜய் அந்தச் சிலையைப் பார்த்ததும் கண் இமைகளில் ஒற்றிக் கொண்டு, நெகிழ்ச்சியுடன் அதற்கு முத்தமிட்டார். எம்.ஜி.ஆரின் மீதான தனது மரியாதையையும், அவரது அரசியல் பாதையைத் தானும் பின்பற்றுவதையும் குறிக்கும் விதமாகச் செய்யப்பட்ட இந்தச் செயல், அங்கிருந்த அதிமுக மற்றும் தவெக தொண்டர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: விஜய் பண்ணது தப்பு! நடவடிக்கை எடுங்க! வழிபாட்டு தளங்களில் அரசியல் அடையாளம்? சிபிஎம் புகார்!

எம்.ஜி.ஆர் திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்து முதலமைச்சராகி ஏழை எளிய மக்களுக்காகப் பல திட்டங்களைச் செயல்படுத்தியவர். விஜய்யும் தற்போது தனது திரையுலகப் புகழை அரசியல் செல்வாக்காக மாற்ற முனைந்து வரும் நிலையில், எம்.ஜி.ஆரின் சிலைக்கு அவர் அளித்த இந்த மரியாதை அரசியல் ரீதியாகப் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. தனது உரைகளிலும் அவ்வப்போது எம்.ஜி.ஆரைத் தனது வழிகாட்டியாகக் குறிப்பிட்டுப் பேசி வருகிறார்.
நாளை மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடியவுள்ள நிலையில், சென்னையில் இன்று நடந்த விஜய்யின் இந்த ரோடு ஷோ தவெக தொண்டர்களிடையே புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் விஜய், சென்னை மக்களின் ஆதரவைத் திரட்டுவதில் முழு முனைப்பு காட்டி வருகிறார்.
இதையும் படிங்க: ஊடகங்களில் விவாதிக்க தடைவிதிக்க வேண்டும்! விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கில் புதிய மனு!!