சட்டமன்றப் பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனைத் தனது அரசியல் ஆசான் என்று பெருமிதத்தோடு குறிப்பிட்டதை விமர்சிப்பவர்களுக்குத் தகுந்த பதிலடி கொடுத்துள்ள சமூக நீதித்துறை அமைச்சரும் விசிக துணைப் பொதுச்செயலாளருமான வன்னியரசு, புரட்சியாளர் அம்பேத்கரைத் தந்தை பெரியார் தனது தலைவராகப் போற்றியது போன்ற ஒரு பக்குவமும் துணிச்சலுமே உதயநிதியின் பேச்சில் வெளிப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், கடந்த ஆகஸ்ட் 28 அன்று சட்டப்பேரவையில் நடைபெற்ற நிகழ்வை நினைவுகூர்ந்துள்ளார். சமூக நீதித்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பதிலளித்து நான் பேசியபோது, திண்டிவனம் தொகுதியில் விசிகவின் வெற்றிக்குப் பாடுபட்ட திமுக உள்ளிட்ட தோழமைக் கட்சிகளுக்கு நன்றி தெரிவித்தேன்; அப்போது 'நாங்கள் மட்டுமே நன்றி சொல்கிறோம், திமுக தரப்பிலிருந்து நன்றி சொல்லவே இல்லை' என இயல்பாக ஒரு கருத்தைக் குறிப்பிட்டேன்.
உடனே எழுந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், 'எங்கள் தலைவருக்கும் அண்ணன் திருமாவளவனுக்கும் இடையே இருப்பது வெறும் தேர்தல் கூட்டணி மட்டுமல்ல, அது கொள்கைக் கூட்டணி; எனது அரசியல் ஆசான் திருமாவளவன் என்று முன்பும் சொன்னேன், இப்போதும் சொல்கிறேன்' என மனம் திறந்து பேசினார். இதற்கு லட்சக்கணக்கான சிறுத்தைகளின் சார்பில் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஆணவ படுகொலைகள்..! தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை..!! அமைச்சர் வன்னியரசு உத்தரவு..!!

உதயநிதியின் இந்த வெளிப்படையான பேச்சைச் சிலர் வேண்டுமென்றே திரித்து நஞ்சைக் கக்குவதாகச் சாடியுள்ள அவர், பெரியாரை ஆசான் என்று ஏற்கும் உதயநிதி, திருமாவளவனை ஆசான் எனச் சொல்வதா என்று சிலர் கொந்தளிக்கின்றனர். பெரியாருக்கு எதிராக ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சனாதனக் கும்பலோடு கொஞ்சி உலாவிவிட்டு, இப்போது திடீரெனப் பெரியார் மீது பாசத்தைக் கொட்டுகின்றனர். பெரியாரைக் கன்னடர் என்று திராவிட இயக்கத்திற்கு எதிராக வெறுப்பைக் கக்கியவர்களோடு கைகோர்த்துக் கொண்டு, தற்போது பெரியார் மீது அக்கறை காட்டுவது வேடிக்கையாக உள்ளது என விமர்சித்துள்ளார்.

தொடர்ந்து தற்போதைய அரசியல் நிலைப்பாடு குறித்து விளக்கிய அமைச்சர் வன்னியரசு, விசிக இன்று தவெகவுடன் இணைந்து நின்றாலும், திராவிட இயக்கங்களுடனான கொள்கை உறவு என்றும் மாறாது என்பதையே உதயநிதி ஸ்டாலினின் கருத்து மிகத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது; இதை ஏற்க முடியாமல் சிலர் காழ்ப்புணர்ச்சியால் புலம்புகின்றனர் எனக் குறிப்பிட்டு, அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார் வழுக்கியும் கேடீன் பது என்ற வள்ளுவரின் திருக்குறளை மேற்கோள்காட்டி விமர்சகர்களுக்குப் பதிலடி கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க: அமைச்சர் வன்னியரசு பேசுனதை தப்பா புரிஞ்சுக்கிட்டாங்க! இதுபோன்ற பிழைகள் இனி நடக்கக்கூடாது! திருமாவளவன் பேச்சு!