அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அதிகரித்து வரும் ராணுவ மோதல்கள் மேற்காசிய பிராந்தியத்தையும், உலக அளவிலும் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. தற்போதைய சூழல் கட்டுப்பாட்டை மீறிச் சென்று வருவதாகவும், உடனடியாக போர் நிறுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் போர் மற்றும் சர்வதேச அமைதி தொடர்பான விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய குட்டரெஸ், உலகின் பல பகுதிகளில் நடைபெறும் மோதல்கள் சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பு அளிக்காத நிலை காரணமாக நீண்டகால பிரச்சினைகளாக மாறி வருவதாக கூறினார்.
அமெரிக்கா–ஈரான் இடையேயான தற்போதைய மோதல்கள் குறித்து கவலை தெரிவித்த அவர், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கு பதிலாக ராணுவ நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்போது, அதன் மிகப்பெரிய பாதிப்பை பொதுமக்களே எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது என்றார்.
இதையும் படிங்க: ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பலை தாக்கினால் ஈரான் மின் நிலையங்களில் வெடிகுண்டு வீசுவோம்: டிரம்ப் மிரட்டல்!

மேற்காசியாவில் ஏற்பட்டுள்ள பதற்றம் அந்த பிராந்தியத்தை மட்டும் பாதிக்காமல், உலக பொருளாதாரம் மற்றும் சர்வதேச பாதுகாப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக அவர் குறிப்பிட்டார். தற்போதைய சூழல் யாரும் எதிர்பார்க்காத அளவிலான பேரழிவை ஏற்படுத்தக்கூடிய நிலைக்கு சென்றுள்ளதாகவும் அவர் எச்சரித்தார்.
பொதுமக்கள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் குட்டரெஸ் தெரிவித்தார். எந்தவொரு மோதலுக்கும் முழுமையான ராணுவ தீர்வு கிடையாது என்றும், பிரச்சினைகளை சமாளிக்க ராஜதந்திர பேச்சுவார்த்தைகளே ஒரே வழி என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், மேற்காசியாவில் முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் செங்கடலின் பாப் அல்-மண்டப் பகுதி வழியாக நடைபெறும் சர்வதேச கப்பல் போக்குவரத்து உரிமைகள் மீண்டும் முழுமையாக உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் ஐ.நா. தலைவர் கேட்டுக்கொண்டார்.
அமெரிக்கா–ஈரான் மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், சர்வதேச நாடுகள் பதற்றத்தை குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்துள்ளது. உலகளாவிய எரிசக்தி விநியோகம், வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு சூழல் மீது இந்த மோதல் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்து பல நாடுகள் கவலை தெரிவித்து வருகின்றன.
போர் நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்ற ஐ.நாவின் அழைப்பு, மேற்காசிய நெருக்கடிக்கு அமைதியான தீர்வை தேடும் சர்வதேச முயற்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது.
இதையும் படிங்க: "ஈரான் செல்ல வேண்டாம்... இந்தியர்களுக்கு மத்திய அரசின் அவசர எச்சரிக்கை!"