மலைப்பாங்கான இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதில், சாலைகளில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் பலரது வீடுகள் மண்ணில் புதைந்தன. உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசி, கேதார்நாத், பத்ரிநாத் மற்றும் முக்கிய சுற்றுலா தலங்களுக்கு செல்லும் பகுதிகளில் நிலச்சரிவால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இதேபோல் கேரளாவிலும் பருவமழை கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. மலப்புரம், கோட்டயம், எர்ணாகுளம், வயநாடு உள்ளிட்ட பல மாவட்டங்களில், நிலச்சரிவு, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடரால் மோசமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. சமீபத்தில் ஹிமாச்சல பிரதேசத்தில் பெய்த கனமழையால், மாநிலம் முழுதும் மிகப் பெரிய அளவில் இயற்கை பேரிடர் ஏற்பட்டுள்ளது. மண்டியில் ஏற்பட்ட திடீர் மேகவெடிப்பால், அதீத கனமழை கொட்டியது. இதில், ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் பல வீடுகள் அடித்து செல்லப்பட்டன. கார்கள், டூவீலர்கள், வேன்கள் உள்ளிட்ட பல வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு, பல கி.மீ.க்கு அப்பால் ஆங்காங்கே கரை ஒதுங்கின. பல இடங்களில் சாலை அரிப்பு ஏற்பட்டதால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. மண்டியில் மட்டும் 154 வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. அதே போல் பிலாஸ்பூர், சம்பா, ஷிம்லா, குலு, கின்னவுர், கங்கரா, சிர்மவுர், சோலான், உனா உட்பட மாநிலத்தின் 12 மாவட்டங்களும் மோசமான பாதிப்பை சந்தித்துள்ளன.
இதையும் படிங்க: டெக்சாஸை ஆட்டம் காண வைத்த பேய் மழை, வெள்ளம்.. எகிறும் பலி எண்ணிக்கை..! தவிக்கும் மக்கள்..!

இந்நிலையில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், கேரளா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கு ரூ.1,066 கோடியே 80 லட்சத்தை விடுவிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் அசாமிற்கு ரூ.375.60 கோடியும், மணிப்பூருக்கு ரூ.29.20 கோடியும், மேகாலயாவிற்கு ரூ.30.40 கோடியும், மிசோரத்திற்கு ரூ.22.80 கோடியும், கேரளாவிற்கு ரூ.153.20 கோடியும், உத்தரகாண்டிற்கு ரூ.455.60 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலங்கள் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையின்போது மிக அதிக மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளன.
மாநில பேரிடர் மீட்பு நிதியின் (SDRF) கீழ் மத்திய பங்கின் ஒரு பகுதியாக ரூ.1,066.80 கோடியை மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், வெள்ளம், நிலச்சரிவு மற்றும் மேக வெடிப்பு போன்ற அனைத்து சூழ்நிலைகளிலும் நரேந்திர மோடி அரசு மாநிலங்களுக்கு ஆதரவாக நிற்கும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
பாதிக்கப்பட்ட அனைத்து மாநிலங்களுக்கும் தேவையான தேசிய பேரிடர் மீட்புப்படை குழுக்கள், ராணுவக் குழுக்கள் மற்றும் விமானப்படை ஆதரவு உள்ளிட்ட அனைத்து தளவாட உதவிகளையும் மத்திய அரசு வழங்கியுள்ளது. தற்போது பருவமழை மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 104 தேசிய பேரிடர் மீட்புப்படை குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

தமிழ்நாடு இந்த பட்டியலில் இடம்பெறவில்லை, ஆனால் முந்தைய அறிவிப்புகளின்படி, 2024-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு, மிக்ஜாம் மற்றும் பெஞ்சல் புயல்களால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு ரூ.37,907 கோடி நிவாரண நிதி கோரியிருந்தது, ஆனால் மத்திய அரசு இதுவரை ரூ.276 கோடி மற்றும் பின்னர் ரூ.522.34 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசு இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பதாகவும், மாநிலங்களின் கோரிக்கைகளை ஆய்வு செய்து கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஹிமாச்சலில் மேகம் பிளந்ததால் வீடுகளை அடித்து சென்ற வெள்ளம்.. பேய்மழைக்கு 69 பேர் பலி..