கள்ளக்குறிச்சி அருகே முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களை ஆபத்தான முறையில் மினி லாரியில் ஏற்றி அழைத்துச் சென்ற சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது என பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாகவே அதிக எண்ணிக்கையிலான விபத்து குறித்த செய்திகள் வந்த வண்ணம் உள்ள நிலையில், போக்குவரத்து விதிகளை மீறியும் மாணவர்களின் நலன் மீது எந்த அக்கறையும் இன்றியும் ஆசிரியர்கள் துணையின்றி அவர்களை அழைத்துச் சென்றது அதிர்ச்சி அளிக்கிறது என அவர் குறிப்பிட்டார்.
முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிக்காக கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கப்படும் வேளையில், குறைந்தபட்சம் வாகன ஏற்பாடு கூட முறையாக செய்யத் தவறியது முறையற்ற செயல் என்றும், அரசுப் பள்ளி மாணவர்கள் என்றால் அவ்வளவு இளக்காரமாகப் போய்விட்டதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

மாணவர்களிடையே விளையாட்டு ஆர்வத்தைத் தூண்டும் முயற்சியின் பலனையே இத்தகைய சம்பவங்கள் சிதைப்பது கவலை அளிக்கும் செயல் என வானதி சீனிவாசன் தெரிவித்தார். மாணவர்களை பாதுகாப்பாக வேன் அல்லது மினிபஸ் போன்ற வாகனத்தில் அழைத்துச் செல்லாமல் சரக்கு வாகனத்தில் பயணம் செய்ய அனுமதி கொடுத்தது யார் எனவும், சரக்கு வாகனங்களில் பயணிகளை ஏற்றக் கூடாது என்ற அடிப்படைச் சட்டம் கூட அறிந்திருக்கவில்லையா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: சாம்பாரில் சாணி பவுடர்..! பள்ளிகளில் தீவிர கண்காணிப்பு தேவை... எச்சரிக்கும் வானதி சீனிவாசன்.!!
இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் பயணியர் வாகனங்களில் பாதுகாப்பாக மாணவர்களை அழைத்துச் செல்ல உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறையை அவர் வலியுறுத்தினார். மேலும் மாணவர்களை சரக்கு வாகனத்தில் பயணம் செய்ய ஏற்பாடு செய்தவர்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ளவும் கேட்டுக் கொண்டார்.
இதையும் படிங்க: கோவில்களில் செல்போன்களுக்கு தடை..! இதை செய்யலாமே.!! மாற்று ஐடியா கொடுத்த வானதி சீனிவாசன்..!