விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) உயர்நிலைக் குழு கலந்தாய்வுக் கூட்டம் இன்று மாலை சென்னையில் அக்கட்சியின் தலைவர் முனைவர் தொல். திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக தலைமையிலான கூட்டணியில் விசிக வலியுறுத்த வேண்டிய முக்கியக் கோரிக்கைகள் குறித்துத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
2019 மக்களவைத் தேர்தல் முதல், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றிக்கு விசிக மிகப்பெரிய பங்களிப்பைச் செய்துள்ளது எனத் தீர்மானம் சுட்டிக்காட்டுகிறது.
கடந்த காலங்களில் குறைவான தொகுதிகளே வழங்கப்பட்ட நிலையில், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் விசிக-விற்கு இரட்டை இலக்க தொகுதிகளை (குறைந்தது 10-க்கும் மேல்) கேட்டுப் பெற வேண்டும் எனத் தலைவர் திருமாவளவனை உயர்நிலைக் குழு கேட்டுக் கொண்டுள்ளது.
இதையும் படிங்க: நாளை விசிக உயர்நிலை குழு அவசர ஆலோசனை! திருமாவளவன் தலைமையில் முக்கிய முடிவுகள்!

சட்டமன்றத் தொகுதிகள் மட்டுமின்றி, வரும் 2028-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலில் விசிக-விற்கு ஒரு எம்.பி. இடத்தை ஒதுக்குமாறு திமுக தலைமையிடம் வலியுறுத்த வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விசிக தனது சுயேச்சையான அடையாளத்தைத் தக்கவைக்கத் அனைத்துத் தொகுதிகளிலும் "பானை" சின்னத்திலேயே போட்டியிடும் என்பதில் கட்சி உறுதியாக உள்ளது. கட்சியின் சிறப்புத் தேர்தல் அறிக்கையை இறுதி செய்வது குறித்தும், வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை அடையாளம் காண்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
சமீபத்தில் பாமக உள்ளிட்ட கட்சிகள் தங்கள் தொகுதிப் பங்கீட்டை உறுதி செய்துள்ள நிலையில், விசிக தனது கோரிக்கையைத் தற்போது வலுவாக முன்வைத்துள்ளது. திமுக கூட்டணியில் விசிக-விற்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்படும் என்பது அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையில் தெரியவரும்.
இதையும் படிங்க: விசிக விருப்ப மனு ! அம்பேத்கர் திடல் நோக்கி படையெடுக்கும் உடன்பிறப்புகள்!