வீரவநல்லூர் காவல் ஆய்வாளர் அருண்குமார் பணியிடை நீக்கம். திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியதாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகார் அடிப்படையில் நெல்லை மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் மீது வழக்கு பதிவு
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் அருண்குமார் (40). இவருக்கும் மதுரையைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் நட்பு ரீதியாக பழக்கம் ஏற்பட்ட நிலையில், நாளடைவில் அது காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இருவரும் திருமணம் செய்து கொள்வதாக பேசி முடிவு செய்திருந்த நிலையில், பின்னர் காவல் ஆய்வாளர் அருண்குமார் அந்த பெண்ணிடம் பேசுவதை தவிர்த்ததாகவும், பெண் தொடர்பு கொண்டபோது அழைப்பை துண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தியடைந்த அந்த பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீரவநல்லூர் காவல் நிலையத்திற்கு சென்றதாகவும் கூறப்படுகிறது. அங்கு தனக்கு நியாயம் கிடைக்கவில்லை எனக் கூறி நெல்லை ஊரக உட்கோட்ட அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் அருண்குமார் மீது புகார் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: தவெக கவுன்சிலர் மீது தண்ணீர் பாட்டில் வீச்சு... விசிலடித்ததால் கடுப்பான உறுப்பினர்கள்..! நெல்லை மாமன்ற கூட்டத்தில் பரபரப்பு.!
புகாரின் அடிப்படையில் மகளிர் காவல் துறையினர் விசாரணை நடத்தி, அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியது, மனரீதியாக கொடுமைப்படுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டப்பிரிவுகள் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவல் ஆய்வாளர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஒழுங்கீன நடவடிக்கையில் காவல் ஆய்வாளர் ஈடுபட்டதாக கூறி நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பாலசுப்ரமணியம் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்ததன் பேரில் நெல்லை சரக டிஐஜி திருநாவுக்கரசு, காவல் ஆய்வாளர் அருண்குமாரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
காவல் ஆய்வாளர் ஒருவரே பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக புகார் அளிக்கப்பட்டு, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
இதையும் படிங்க: தனியாக வசிக்கும் பெண்களே குறி... வீடு புகுந்து ஆபாச படமெடுத்து ரசித்த ‘சைக்கோ’... சிக்கியது எப்படி?