தவெக தலைவர் விஜய்க்காக பெரம்பூரில் பிரம்மாண்டமாக திறக்கப்பட்ட தேர்தல் தலைமை அலுவலகம் இன்னும் திறக்கப்படாமல் மூடியே கிடக்கிறது. விஜய் வரும்போது மட்டும் அலுவலகம் செயல்படும் என்ற நிலை கட்சியினரிடையே கேள்வியை எழுப்பியுள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் தவெக, பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் போட்டியிடுகிறார். இரு தொகுதிகளிலும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள விஜய், பெரம்பூரை தனது அரசியல் பயணத்தின் முக்கிய மையமாகத் தேர்ந்தெடுத்துள்ளார்.
இதனால் பெரம்பூர் கொடுங்கையூர் - விவேகானந்தர் சாலை சந்திப்பில் பிரம்மாண்ட தேர்தல் பணிமனை மற்றும் தலைமை அலுவலகம் அமைக்கப்பட்டது. விஜய் நேரடியாக வந்து திறந்து வைப்பார் என்ற எதிர்பார்ப்பில் அலுவலகம் தயாராக வைக்கப்பட்டிருந்தது. ஆனால் விஜய் அலுவலகத்தை திறக்கவில்லை. இதனால் தேர்தல் அலுவலகம் இன்றும் பூட்டிய நிலையிலேயே உள்ளது.
இதையும் படிங்க: விஜய் ஏமாத்திட்டா என்ன? நம்ம அஜித் இருக்காரே!! அதிமுக புதிய ப்ளான்! எடப்பாடியாருக்கு ஏக குஷி!
வடசென்னை பகுதியில் தவெக தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருந்தனர். “மக்களுக்கான மாற்றத்தை வடசென்னையிலிருந்து தொடங்குவோம்” என்று முழக்கமிட்டு வந்தனர். விஜய் பெரம்பூரில் வீடு எடுப்பார், அங்கிருந்து தேர்தல் பணிகளை தீவிரப்படுத்துவார் என்றும் பேசப்பட்டது. ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை.

அலுவலகம் மூடியிருப்பது குறித்து கட்சி நிர்வாகிகளிடம் கேட்டபோது, “விஜய் வந்து திறந்து வைப்பார் என்று எதிர்பார்த்தோம். அவர் திறக்காததால் என்ன செய்வது என்று தெரியவில்லை” என்று தெரிவித்தனர். தற்போது சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் சரவணன் தனது அலுவலகத்தில் இருந்து பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
விஜய் பெரம்பூரில் போட்டியிடுவதால் அடித்தட்டு மக்களின் வாக்குகள் அவருக்கு விழும் என்ற கணக்கில் களப்பணி நடைபெற்று வருகிறது. ஆனால் தலைமை அலுவலகம் மூடியிருப்பது கட்சியினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. “விஜய் வந்தால் மட்டும் அலப்பறை செய்யும் கட்சியினர், அவர் இல்லாதபோது அலுவலகத்தை மூடி வைப்பதா?” என்ற கேள்வி எழுந்துள்ளது.
விஜய் தனது அரசியல் பயணத்தை வடசென்னையில் இருந்து தொடங்கியிருப்பது துணிச்சலான முடிவு என்றாலும், அலுவலகம் செயல்படாத நிலை கட்சியின் தேர்தல் தயாரிப்பில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. விஜய் பெரம்பூரில் வென்றாலாவது அங்கு வருவாரா என்ற சந்தேகமும் தொண்டர்களிடையே எழுந்துள்ளது.
இதையும் படிங்க: அண்ணனே இப்பிடி பண்ணலாமா? விஜய் போடும் கண்டிஷனால் தர்மசங்கடம்!! தவிக்கும் தவெக நிர்வாகிகள்!!